விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக எரித்துக்கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், அவர் இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகளை முன்விரோதம் காரணமாக, அதே பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த முருகன், கலியபெருமாள் இருவரும் உயிருடன் தீ வைத்து கொலை செய்ததாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. சிறுமி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விழுப்புரத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் மே 10-ம் தேதி முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான்
மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குற்றவாளிகள் மீது திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கொடூர செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும். உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிமுக தலைமைக் கழகம், விழுப்புரத்தில் சிறுமியை எரித்துக்கொன்ற முருகன், கலியபெருமாளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த, கலியபெருமாள் சிறுமதுரை புதுக்காலனி கிளைக்கழக செயலாளர், முருகன் சிறுமதுரை காலனி கிளைக்கழக மேலைப்பு பிரதிநிதி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுபினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.