திருப்பூர் ராயர்பாளையத்தில் பூஜா தனது தாய்மாமா இப்ராகிம் சாகரின் வீட்டில் தங்கி பனியன் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவரின் தாய், தந்தை 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட மாமா வீட்டில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இவரது சகோதரர்கள் மும்பையில் இருக்கின்றனர்.
பூஜாவும் அவர் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை பார்த்த லோகேஷும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரது காதல் வீட்டிற்கு தெரிய வரவே இப்ராகிம் சாகர், அவரது அக்கா ருக்சான் இருவரையும் கண்டித்ததாக, இப்ராகிமின் மனைவி பாத்திமா என்கிற ருக்சானா. நம்மிடம் தெரிவித்தார்.
பூஜா நடந்த சம்பவங்களை உறவினர் ருக்ஷனாவிடம் கூறியுள்ளார். இது கொடுத்த வாக்குமூலம் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் 8 வருடங்களாக பூஜா எங்களுடன் இருந்து பனியன் கம்பெனியில் கைபிடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக பூஜா, லோகேஷை காதலித்து வந்துள்ளார். இருவரும் இரண்டு நாட்கள் வெளியே தங்கி விட்டு வந்துள்ளனர். இதையறிந்த, எனது கணவர் , அவரது அக்கா ருக்சானா, மூன்று மாதத்திற்கு முன்பு லோகேஷை வீட்டிற்கு அழைத்து கண்டித்துள்ளனர். அப்போது, அவர் பூஜாதான் தன்னை தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார். அதற்கு பூஜா, இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும், தற்போது பேச போனால், சக ஊழியர்கள் கிண்டல் செய்கிறார்கள், என்னிடம் பேசாதே , பேசினால் கொன்றுவிடுவேன் என லோகேஷ் மிரட்டுவதாக் தெரிவித்துள்ளார். இருவரையும் பேச வேண்டாம் என சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று உடலில் தீக்காயங்களுடன் பூஜா பல்லடம் அருகே இருப்பதாகவும், 108 ஆம்புலென்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக எங்கள் வீட்டின் உரிமையாளரின் மகனுக்கு வந்த தகவலை, தங்களிடம் சொன்னதின் அடிப்படையில் மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம்.
அப்போது பாதிக்கப்பட்ட பூஜா வாக்குமூலம் தகவலாக – உறவினர் ருக்சானாவிடம் கூறியதாவது:
தான் சுபாஸ் என்பவரின் போனிலிருந்து லோகேஷை அழைத்து உன்னை பார்க்கனும்னு சொன்னேன்.
லோகேஷ் வந்து தன்னை (பூஜாவை) அழைத்துக்கொண்டு பெத்தம்பாளையம் காட்டு பகுதிக்கு மதியம் 3 மணிக்கு கூட்டிச்சென்று மரத்தடியில் அமர்ந்து பேசினோம்.
லோகேஷிடம் ஏன் என்னுடன் பேச மாட்டீங்கிற? என கேட்டபோது, கீழே கிடந்த கல்லை எடுத்து பூஜாவின் தலையில் அடித்ததோடு, தனது பெல்ட்டில் இருந்த பக்கில்ஸால் தொடைபகுதியில் இழுத்து விட்டதாகவும், மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி இதோடு நீ செத்து தொலைடி என வேகமாக் கத்திவிட்டு, தீப்பெட்டியை பற்ற வைத்து தன் மீது போட்டு விட்டான். தான் தீப்பிடித்த நிலையில் பெத்தம்பாளையத்தை நோக்கி ஓடும்போது பின்னாலே லோகேஷ் துரத்தி வந்ததாகவும், ஆட்கள் வருவதை பார்த்த லோகேஷ் தப்பி ஓடிவிட்டதாகவும், 108 ஆம்புலென்ஸ் மூலம் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, பூஜா தெரிவித்துள்ளதாக ருக்சானா கொடுத்த வாக்குமூலம் முதல் தகவல் அறிக்கையாக பதியப்பட்டது.
இதனையடுத்து, கொலைமுயற்சி வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்றது. பூஜா நேற்று நள்ளிரவில் இறந்ததை அடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தற்போது காயமடைந்த லோகேஷ் கைது செய்யப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில், காவல் துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பூஜாவின் அத்தை ருக்சானா கூறியதாவது:
இருவரது பழக்கத்தை அறிந்து கண்டித்த போது, லோகேஷ் தங்களது காலில், விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இனிமேல் இருவரும் பேசக்கூடாது, சிம் எண்ணை மாற்றி விடு என சொல்லி அனுப்பியுள்ளார். கடந்த நான்கு நாட்களாகத்தான் பூஜா வேலைக்கு சென்றுள்ளார். இச்சம்பவம் நடந்த பின்பு , பூஜா கொலை செய்யப்பட்ட இடத்தில் போதைபோருட்கள் கிடந்ததாக காவல் துறையினர் கூறியதாக குறிப்பிட்டார். பூஜாவிடம் தவறாக நடந்துகொண்ட பின்பு, தன்னை திருமணம் செய்துகொள்ள பூஜா வற்புறுத்தியுள்ளார்.இதையடுத்து கொடூரமாக தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டுள்ளான். அவனுக்கு தூக்கு தண்டனை தரவேண்டும். உடம்புல துணியில்லாம படுத்துக்கிடந்த, அங்கியிருந்தவங்க பார்த்துதான் போலீஸ்க்கு போன் பண்ணி சொல்லி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
தங்களிடம் ஒரு பைசா கூட இல்லை, கடன் வாங்கித்தான் அடக்கம் செய்ய வந்திருக்கிறோம். அவளுக்கு ஆதார் கார்டு கிடையாது. அதனால அடக்கம் செய்ய மறுக்கிறார்கள். அதிகாரிகள் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பூஜாவின் உடல் அவரது அத்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, கோவை அமரர் ஊர்தி மேலாளர் மற்றும் ஓட்டுநர்கள், ஏற்பாட்டில், பூஜாவின் உறவினர்களின் ஆதார் கார்டுகளை கொண்டு தகனம் செய்ய நஞ்சுண்டாபுரம் மின் மாயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“