madras high court, girl buried villupuram, chennai high court, tamil nadu government, சென்னை ஐகோர்ட், மெட்ராஸ் ஐகோர்ட், விழுப்புரத்தில் மாணவி உயிருடன் எரிப்பு, தமிழக செய்திகள், news, news in tamil
விழுப்புரத்தில் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
இது தொடர்பாக சென்னை ஆவடியைச்சேர்ந்த சுமதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு படித்துவந்த ஜெயஸ்ரீ என்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் முருகன், மற்றும் கலியபெருமாள் இருவரும் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த சிறுமி ஜெயஸ்ரீ, இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் இருவரும் முன்விரோதம் காரணமாக தன்னை தீவைத்து எரித்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள், ஆனால் அவர்கள் இருவரும் ஆளும்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழக காவல்துறை விசாரித்தால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது என்றும் எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் மனு அனுப்பியுள்ளதாகவும் எனவே வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக காவல்துறை விசாரணை திருப்திகரமாக இருப்பதாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர்கள் தொலைபேசி வாயிலாக தன்னிடம் தெரிவித்ததாகவும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு தெரிவித்தார். எனவே வழக்கை திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”