Girl dies after consuming soft drinks Tamil News : கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை பெசன்ட் நகரில் காற்றழுத்த பானம் குடித்ததனால் 13 வயது சிறுமி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை சோழவரத்தில் உள்ள அதன் உற்பத்திப் பிரிவைத் தற்காலிகமாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூடினர். பிரேதப் பரிசோதனையில் தாரணி என்ற சிறுமி, சுவாசக் குழாயில் பானம் நுழைந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
அருகிலுள்ள கடையில் பானத்தை வாங்கி மதியம் உட்கொண்டிருக்கிறார் தாரணி. இதனைப் பார்த்த அவருடைய சகோதரி அஸ்வினி, பாட்டிலை வாங்கியிருக்கிறார். ஆனால், அஸ்வினி வெளியே சென்றவுடன், தாரணி மீண்டும் அந்த பானத்தை உட்கொண்டு வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளார். இதனைக் கட்டுப்படுத்த முயன்றபோது, குடித்த பானம் அவருடைய சுவாச அமைப்பில் நுழைந்திருக்கிறது. இதனால், சிறுமி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.
உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்தபோது, வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சாஸ்திரி நகர் போலீசார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோழவரத்தில் உள்ள உற்பத்தி யூனிட்டிற்கு சென்று பல்வேறு கடைகளுக்கு அனுப்பப்பட்ட அதே தொகுதியின் 540 பாட்டில்களை சேகரித்தனர். மாதிரிகள் பகுப்பாய்விற்கு அனுப்பப்படும் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த பிரிவு மூடப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாரணிக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்ததும் காற்றடைத்த பானங்களை உட்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil