சென்னை மாநகரம் முழுவதையும், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆறு மாதங்களுக்குள் சென்னை முழுவதும் சுமார் 3 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து சீரமைப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
சென்னையில் கடந்த ஆண்டு(2018) பிப்ரவரி மாதம் வரை 45 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் நடவடிக்கையின் பேரில் தற்போது 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேல் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை காவல்துறைக்கு உதவும் வகையில் தனது சேமிப்புப்பணம் 1.5 லட்சத்தை அளித்த சிறுமியை காவல ஆணையர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சென்னை, காட்டுபாக்கம், ஜாஸ்மின் கோர்ட் என்ற முகவரியில் வசிப்பவர் சத்யநாராயணன். இவரது மகள் ஸ்ரீஹிதா (9) 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீஹிதா சில வாரங்களுக்கு முன்னர் ராயப்பேட்டையிலுள்ள தனது தந்தை சத்யநாராயணாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு காவல்துறையினர் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து கலந்தாய்வு மேற்கொண்டிருந்தனர்.
அப்போது இதனைக் கண்ட சிறுமி ஸ்ரீஹிதா தனது சேமிப்பிலிருந்து சிசிடிவி கேமரா பொருத்த பணம் தருவதாக கூறினார். இந்நிகழ்வை கண்ட காவல் அதிகாரிகள் சிறுமியை பாராட்டிவிட்டு சென்றனர். ஆனால், சில நாட்களில் சிறுமி ஸ்ரீஹிதா தனது தந்தையுடன் காவல் அதிகாரிகளை சந்தித்து, தனது சேமிப்பிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை நிதியுதவியாக அளித்தார்.
சிறுமியிடம் விசாரித்தபோது, சிசிடிவி கேமராவால் காவல்துறையில் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தனது தந்தை கூறியதாகவும், ஆகவே, காவல்துறைக்கு தன்னால் முடிந்த தனது சேமிப்பிலிருந்த ரூ.1.5 லட்சம் பணத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/03/a760-300x217.jpg)
சிறுமியின் இச்செயல் குறித்து கேள்விப்பட்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சிறுமி ஸ்ரீஹிதாவை நேரில் அழைத்து பாராட்டினார். இதைத் தொடர்ந்து, பலரும் சமூக தளங்களில் ஸ்ரீஹிதாவின் செயல்பாட்டை பாராட்டி வருகின்றனர்.