பேருந்து ஓட்டையில் மாணவி விழுந்து இறந்த வழக்கில் விடுவிக்க கோரி தனியார் பள்ளியின் தாளாளர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சென்னை, தாம்பரத்தை அடுத்த சேலையூர் சீயோன் பள்ளியில் படித்து வந்த 6 வயது மாணவி ஸ்ருதி, 2012 ஜூலை 25 ஆம் தேதி ஆண்டு பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் விழுந்து, பேருந்து சக்கரத்தில் அடிபட்டு மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் பள்ளித் தாளாளர் விஜயன், பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன், டிரைவர் சீமான், கிளீனர் சண்முகம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வாகனத்துக்கு 2012 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி எஃப்.சி. தகுதிச் சான்று வழங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம் பள்ளி வாகனங்களில் முறையாக பாதுகாப்பைக் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. சில மாதங்களுக்கு வாகன ஆய்வாளர்கள் பள்ளி வாகனங்களை எல்லாம் தீவிரமாக சோதனையிட்டனர். பின்னர் கைதானவர்கள் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகிவிட்டனர்.
இந்த நிலையில் தான் அந்தப் பள்ளி தாளாளர் விஜயன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மாணவி சுருதி பயணித்த அந்த பேருந்து என்னுடையதே அல்ல, அதனால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். அந்தப் பேருந்து யோகேஷ் என்பவருடையது. அவர் தனியார் பேருந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
அதில் எங்கள் பள்ளிப் பெயரைப் பயன்படுத்தி வந்தார். அவருக்கு ஏற்கனவே மூன்று பேருந்துகள் இருக்கின்றன. இப்போது இரு பேருந்துகளை விற்றுவிட்டார். எங்கள் பள்ளிக்கு 13 பேருந்துகள் இருக்கின்றன. எனவே அந்தப் பேருந்துக்கும் எங்கள் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லை. இதுபற்றிக் காவல் துறையிடமும் தெரிவித்திருக்கிறோம். எனவே அந்த அடிப்படையில் என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இது தொடர்பாக வரும் 23 ஆம் தேதிக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.