Advertisment

என்.எல்.சி விவகாரம்; துரோக வரலாற்றில் கூடாரமே திமுக தான்: ஜி.கே. மணி

என்.எல்.சி விவகாரத்தில் துரோக வரலாற்றின் கூடாரமே திமுகதான் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
GK Mani has said that DMK is the tent of history of treachery in the NLC issue

பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என்.எல்.சி விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பதிலுக்கு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காது ஏன்? என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வினா எழுப்பியிருக்கிறார்.

Advertisment

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் திமுகவின் துரோகம் அவரது அறிக்கை வாயிலாகவே அம்பலப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாட்டின் மிக முக்கியத்துறையான வேளாண் துறையின் அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு வேளாண் துறை மீதும் உழவர் நலனிலும் தான் அக்கறை இல்லை என்று பார்த்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பொது விவகாரங்கள் குறித்த அடிப்படை பார்வை கூட இல்லை என்பது இப்போதுதான் தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் தெரிவிக்கப்படும் பதில்களுக்கும். அவை நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உறுப்பினர்களின் வினாக்களுக்கு மத்திய அமைச்சர்கள் எழுத்து மூலம் அளிக்கும் பதில்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படாது.

மாறாக உறுப்பினர்களின் இணைய பக்கத்திலும் நாடாளுமன்ற அவைகளின் இணையதளங்களிலும்தான் வெளியிடப்படும்.

அவற்றின் மீது எந்த எதிர் வினாவும் எழுப்ப முடியாது, விவாதமும் நடத்த முடியாது. தமிழ்நாட்டின் அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு இது கூட தெரியாதது பரிதாபம்தான்.

அடுத்ததாக தமிழ்நாட்டில் என்.எல்.சி சுரங்கத் திட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அமைச்சர் கூறுவதற்கான துணிச்சலை வழங்கியது தமிழகத்தை ஆளும் திமுக அரசுதான்.

தமிழ்நாட்டில் 64,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை உரிமம் 1956 ஆம் ஆண்டிலிருந்து என்.எல்.சிக்கு வழங்கப்பட்டுவருகிறது.

இந்த உரிமம் வரும் 2036ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்எல்சிக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துவிட்டால் அதன் பின் என்.எல்.சி தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது.

அதை செய்யும் அதிகாரம் திமுக அரசுக்கு இருக்கும் நிலையில் அந்த அதிகாரத்தை செயல்படுத்தாமல் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை பன்னீர்செல்வம் கேள்வி கேட்பதே அவரது கையாலாகாத தனத்தைத்தான் காட்டுகிறது.

திமுக அரசின் தோல்வியையும் துரோகத்தையும் மூடி மறைப்பதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீது பன்னீர்செல்வம் பழி போட முயல்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

திமுக சார்பில் மக்களவையில் 24 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவராவது என்எல்சி விவகாரம் குறித்தும், உழவர்கள் நலன் குறித்தும், நாடாளுமன்றத்தில் வினா எழுப்பி உள்ளார்களா?

என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து உழவர்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவிற்கும், எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை.

மேலும், தமிழ்நாட்டில் எந்த ஒரு புதிய நிலக்கரி சுரங்கங்களையும் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் உத்தரவாதம் அளித்தவர் பன்னீர்செல்வத்தின் முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.

ஆனால் நெய்வேலியில் மூன்றாவது சுரங்கத்திற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என இதே மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுப்பிய வினாவிற்கு விடை அளித்திருந்தார்.

அது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் என்ற முறையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து “சட்டப்பேரவையில் நீங்கள் அறிவித்தவாறு என்எல்சி மூன்றாவது சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட மக்களுடன் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்துவேன்” என்று உறுதிபடகூற வேண்டும். அவ்வாறு கூறினால் அவரை மண்ணைக் காக்க வந்த வீரபாண்டிய கட்டபொம்மனாக கடலூர் மாவட்ட மக்கள் போற்றுவார்கள். இல்லாவிட்டால் மண்ணுக்கு துரோகம் செய்த எட்டப்பனாகத்தான் வரலாற்றில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இடம் பெறுவார். இது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pmk Pmk Leader Gk Mani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment