/indian-express-tamil/media/media_files/2025/05/31/8YhPVTvHCuagWi2a1oiV.jpg)
தலைமறைவாக செல்வது அல்லது உயிரை விடுவது என இரண்டு முடிவுகளை தாம் எடுத்துள்ளதாக பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் அண்மைக் காலமாக கடுமையான உட்கட்சி பூசல் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, அன்புமணி மீது அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே மணி செய்தியாளர்களை சந்தித்து இன்று (மே 31) உரையாற்றினார். அப்போது, கட்சி விவகாரம் தொடர்பாக தாம் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, "ஒரு முறை அல்ல பல முறை ராமதாஸிடம் கூறினேன். எனக்கு இருக்கும் வேதனை, மன உளைச்சல் அனைத்தையும் தெரிவித்து விட்டேன். கோபப்பட வேண்டாம் என்று ராமதாஸிடம் எடுத்துரைத்தேன். இரண்டு முடிவுகளை நான் எடுத்திருக்கிறேன்.
அதில் ஒன்று, ஊடகத்தினர், என் குடும்பத்தினர், இந்த நாட்டு மக்கள் உள்ளிட்ட யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக சென்று விடுவது. கட்சியினர் கண்களில் கூட படாத வகையில் வேறு எங்கேயாவது சென்று விட வேண்டும். அப்படி இல்லையென்றால் நான் உயிரோடு இருக்கக் கூடாது. இந்த இரண்டு முடிவுகளை நான் எடுத்திருக்கிறேன்.
எவ்வளவு கஷ்டமாக உணர்ந்தால் இதையெல்லாம் நான் ஊடகத்தினர் முன்னிலையில் கூறுவேன். ஊடகத்தில் சொல்லக் கூடிய விஷயங்களா இவை? வேதனையின் வெளிப்பாடாக இவற்றை கூறுகிறேன். எங்கள் கட்சியில் நடக்கும் சம்பவங்கள் தான் இவை அனைத்திற்கு காரணமாக அமைகிறது.
இந்தப் பிரச்சனை மற்றும் பிரிவினைக்கு நான் தான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். மேலும், மற்றொரு அரசியல் கட்சியினர் தான் இவற்றுக்கு காரணம் என்றும் கூறுகின்றனர். ஆனால், இவை அனைத்தையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
சுமார் 45 ஆண்டுகளாக ராமதாஸ், அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அனைத்து விவரங்களும் தெரியும். அதே சூழலில், மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர் அன்புமணி. அவருக்கும் அரசியல் அனுபவம் இருக்கிறது. மற்றவர்கள் அறிவுரை கூறி தான் அவர்கள் இருவருக்கும் விஷயங்கள் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
மற்றவர்கள் கூறுவதால் கட்சிக்குள் இந்தப் பிளவு ஏற்படவில்லை. சந்தர்ப்ப சூழலாலும், சில நிகழ்வுகளாலும் இது போன்று நடந்து விட்டது. ராமதாஸ் மற்றும் அன்புமணியை ஒற்றுமையாக்க வேண்டும் என்பது தான் எல்லோரது முயற்சியும். அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இதற்காக ஊடகத்தினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று ஜி.கே. மணி வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.