இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணியை உறுதி செய்து வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று (பிப்.26) அறிவித்தார். இதன் மூலம் அவர் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியுள்ளார்.
முன்னதாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் தமிழகத்தில் பா.ஜ.க உடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்துக் கொண்டது. இந்த கூட்டணியை மீண்டும் ஒட்ட வைப்பதற்காக ஜி.கே.வாசன் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதில் பலனில்லாமல் போனது.
இந்நிலையில், வருகிற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் த.மா.கா இணைந்துள்ளது. இதை அறிவித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்திக்கிறோம். மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பா.ஜ.கக கூட்டணியில் இடம்பெறுகிறோம்.
நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக மேலிட தலைவர்களிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.
மூப்பனார் காலத்தில் தொடங்கப்பட்டதில் இருந்து பிராந்திய கட்சியான தமாகா தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமாகாவின் கருத்துக்களை முறையாக கேட்டு, தமிழகத்தின் நலனுக்காக எந்த இயக்கம் மத்தியில் பாடுபடும் என்ற நம்பிக்கையோடு இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இன்றைய சூழலில், தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு இதை விரும்பம் மத்திய அரசு உள்ளது. அதற்கு பிரதமரை கோடிட்டு காண்பித்து பல உதாரணங்கள் சொல்ல முடியும். மேலும், இந்தியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலித்து கொண்டிருக்கிறது. மூன்றாவது முறை பாஜக ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும். ஏழை எளிய மக்களின் கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகரிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
எனினும் த.மா.கா எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது. எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இன்னும் தகவல் வெளியிடப்படவில்லை. பா.ஜ.க - த.மா.கா இடையே கூட்டணி உறுதியான நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசுகிறார். பாஜக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை த.மா.கா கேட்பதாக கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.
அ.தி.மு.க சார்பில் ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி த.மா.கா. கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், ஜி.கே.வாசன் எம்.பி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“