கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். இதில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்ததாவது:-
வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சியை வலுப்படுத்தும் விதமாக, இது போன்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவையை தொடர்ந்து கன்னியாகுமரி, மதுரை மற்றும் டெல்டா மண்டலங்களிலும் இக்கூட்டம் நடைபெறும் மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் குரலை வலுப்படுத்தும் விதமாக சட்டமன்றத்தில் கட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் விதமாக இக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
மத்திய அரசு சிறுபான்மை மக்களை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வளர்ச்சி அடைய செய்யும் விதமாக திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதை கண்காணித்து உறுதி செய்யும் பணிகளை கூட்டணி கட்சி என்கிற முறையில் செய்து வருகிறோம். இஸ்லாமிய மக்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக வக்பு திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இஸ்லாமிய மக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். புதிய வக்பு சட்டத்தின் மூலம் அவர்களது வளர்ச்சி உறுதி செய்யப்படும். அதற்கான அங்கீகாரமும் சிறப்பாக கிடைத்துள்ளது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர இஸ்லாமிய மக்களுக்கு நூறு சதவீதம் வக்பு சட்டம் உதவும்.
மருதமலை கோவில் குடமுழுக்கு விழா முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக அவர்களுக்கான மருத்துவ வசதி மற்றும் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். கோடை காலத்தில் மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபடாத வகையில் கிடைக்க மாநகராட்சி செயல்பட வேண்டும். மழை நீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
பிரதான சாலைகளில் பார்க்கிங் மற்றும் நடைமேடை வசதியை தரம் உயர்த்த வேண்டும். தென்னை மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அரசு பூச்சி மருந்துகளை வழங்க வேண்டும். விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சனையில் அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு காண வேண்டும்.
ஆளும் தி.மு.க அரசின் மீது மக்களுக்கு அதிர்ச்சி அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் தி.மு.க அரசு தொடர்ந்து மக்களுக்கு எதிரான செயல்களை செய்ததும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்ததும் தான். மாநிலம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள அதே வேளையில் மக்கள் மீதான சுமையும் அதிகரித்துள்ளது. பால்விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என மக்களுக்கு சுமை தான் அதிகரித்துள்ளது.
ஆளும் தி.மு.க அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மாற்றுக் கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்லாட்சி அமைக்க வேண்டும். அந்தக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படும்.
அ.தி.மு.க - பாஜக கூட்டணி அமையும் என்றால், நல்லது நடக்கும் என நம்புகிறோம். பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் உள்துறை அமைச்சரை சந்தித்து பல கோரிக்கைகளை முன் வைத்ததோடு அரசியலும் பேசப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை, நமது மாணவர்கள் அறிவு திறன் வளர்ச்சி பெற்று சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. எந்த மொழியையும் அரசுகள் திணிக்கவில்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொண்டாலும், ஆளும் தி.மு.க அரசு அதனை புரிந்தும் புரியாமல் இருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை, தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை எதிர்த்து ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையும். த.வெ.க புதிதாக தொடங்கிய கட்சி. அதன் செயல்பாடுகள் எப்படி இருந்தாலும் வாக்காளர்கள் தான் முடிவு செய்வார்கள்
நீட் பிரச்சினையை பொறுத்தவரை நீட் குறித்து தி.மு.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது கொலை கொள்ளை பாலியல் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது, இதிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையில் அறிவிக்கப்படாத தொகுதி மறு வரை சீரமைப்பு தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டது, இப்போது நீட் குறித்தான கூட்டம் நடத்தப்படுகிறது. கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம்.
மத்திய பா.ஜ.க ஆட்சியில் நாடு அமைதியாக ஒற்றுமையாக இருக்கிறது. மத்திய அரசின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்த போதும், அதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.