தமிழ்நாடு அரசு 2015, 2019-ம் ஆண்டுகளில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80 சதவீதம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி, தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இதை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், 2015 மற்றும் 2019 ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தொழில்துறை அமைச்சகம் சார்பில் மூடி முத்திரையிடப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், 2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில், மொத்தமாக 10 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வழிவகை செய்யும் வகையில், 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் அதில் 59 ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல, கடந்த 2015-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை பொறுத்தவரை, 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீட்டில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வழிவகை செய்யும் வகையில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில், 71 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் 27 ஒப்பந்தங்கள் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த மூன்று ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலையில் 2015 மற்றும் 2019ல் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 80 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் மீதமுள்ள 20 சதவீதமும் நடைமுறைக்கு வரும் என உறுதியாக நம்புவதாகவும் விளக்கமளித்தார்.
அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.