‘எனது ஓட்டு உங்களுக்கு இல்லை என என்னிடம் நேரடியாக கூறியவர் ஞானி’ : மு.க.ஸ்டாலின்

'ஞானியையும் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்தோம். காபியும் அளித்தார். இறுதியில், ‘என்னுடைய ஓட்டு உங்களுக்கு இல்லை’ என்று நேரடியாகவே சொன்னார்.

எழுத்தாளர் ஞானிக்கு அஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள நிருபர்கள் சங்கத்தில் நேற்று (ஜனவரி 24) நடந்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், நீதியரசர் சந்துரு, பத்திரிகையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஞானியின் நினைவைப் போற்றும் வகையில் தலைவர்கள் பேசினர். அதில் சில பகுதிகள்:

தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்) : ‘ஞானியுடன் உடன்பட்டாலும், முரண்பட்டாலும் அவருடைய எழுத்து விளிம்புநிலை மக்களுக்காக இருந்தது. ஒடுக்குமுறைக்கும், அதிகாரச் செருக்கிற்கும் எதிரானதாக இருந்தது. இறுதிவரை அவருடைய தனித்த குரல் எந்தச் சார்புகளும் அற்று ஒலித்துக் கொண்டிருந்தது. தோழர் ஞானிக்கு செவ்வணக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் செலுத்துகிறது’

ஆர்.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்) : ‘ஞானி எழுத்துகளில் சமரசம் செய்து கொண்டவர் அல்ல. அவருடைய பார்வையை அச்சமில்லாமல் பொதுவெளியில் முன் வைத்திருக்கிறார். அவர் மறைவதற்கு முன்னால் கூட வைரமுத்து- ஆண்டாள் பிரச்னை தொடர்பாகத் தன்னுடைய கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இன்று வரை அது தொடர்பான கருத்துக்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

விமர்சனத்திற்கு ஆளான கட்டுரையில் சொல்லப்பட்ட, ‘தேவதாசி’ என்கிற சொல்லை வைத்துக் கொண்டு சிலர் தூண்டிவிடுகிறார்கள். சவால் விடுகிறார்கள். தேவதாசி முறையை கோவிலை ஒட்டி வளர்த்துக் காப்பாற்றியது யார்? எந்த சமூகம் வளர்த்தது? தமிழகச் சட்டமன்றத்திலேயே சத்தியமூர்த்தி தேவதாசி முறைக்கு ஆதரவாகப் பேசியதை மறந்துவிட முடியுமா? இதையெல்லாம் தான் ஞானி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்’

கோபண்ணா (காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர்) : ‘ஞானி எழுதிய ‘ஓ பக்கங்கள்’ பத்தியில் அவர் அரசியல் கட்சிகளை விமர்சித்தார். சமூக அவலத்தை விமர்சித்தார். அவருடைய பத்தி வார இதழ்களில் வரும்போது நாங்கள் ஆவலுடன் வாசிப்போம். அவருடன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். சில கருத்துக்களில் என்னுடன் உடன்படுவார். பல கருத்துகளில் முரண்படுவார். அவருக்கான பார்வையை அவர் இறுதி வரை மாற்றிக் கொள்ளவே இல்லை’

பாலு (பா.ம.க ஊடகத் தொடர்பாளர்) : ‘ஞானி எந்தக் கட்சியையும் விமர்சிக்கத் தவறவில்லை. பா.ம.க வையும் அவர் விமர்சித்திருக்கிறார். அவருடைய விமர்சனத்தில் இருந்தது சமூகத்துக்கான பார்வை. யாருக்கும் அஞ்சாத துணிச்சலான பார்வை. அவருடைய ‘ஓ பக்கங்களில்’ இருந்த நேர்மைக்கும், துணிவுக்கும் வாரிசாக இங்குள்ள பத்திரிகையாளர்கள் வரவேண்டும்’

மு.க.ஸ்டாலின் (தி.மு.க செயல் தலைவர்) : ‘ஞானி பல கட்சிகளை விமர்சித்திருக்கிறார். குறிப்பாக தி.மு.க.வை அதிகமாக விமர்சித்திருக்கிறார். அதெல்லாம் பண்பட்ட, நாகரீகமான, எங்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிற விமர்சனங்களாக இருந்தன. எதையும் வெளிபடையாகச் சொல்ல ஞானி தயங்கியதே இல்லை.

1984-ம் ஆண்டு தேர்தல் சமயம், நான் ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர். ஞானி அதே தொகுதியின் வாக்காளர். வாக்குக் கேட்டுப் போகிறபோது ஞானி குடியிருந்த பீட்டர்ஸ் காலனிக்குப் போனேன். பல பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன். வாக்குக் கேட்டேன். ஞானியையும் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்தோம். காபியும் அளித்தார். இறுதியில், ‘என்னுடைய ஓட்டு உங்களுக்கு இல்லை’ என்று நேரடியாகவே சொன்னார்.

அடுத்து 1989-ம் ஆண்டு தேர்தல் சமயம். அவருடைய வீட்டுக்குப் போனேன். பேசினோம். அப்போது அரசியல் சூழ்நிலை மாறியிருந்தது. அன்று, ‘உங்களுக்குத் தான் ஓட்டுப் போடுவேன்’ என ஞானி கூறினார். 1984-ல் தோல்வியடைந்த நான், 1989-ம் ஆண்டில் வெற்றிபெற்றேன்.

மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்த சமயம், வி.பி. சிங் தமிழகத்திற்கு அடிக்கடி வந்தார். அப்போது சிங்குடன் சென்று அவருடைய கூட்டங்களில் பேச்சை மொழிபெயர்த்தவர் ஞானி தான். 2014-ம் ஆண்டு ஞானியிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இரண்டு மணி நேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். என்னுடைய வளர்ச்சிக்கான பல விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார் ஞானி. அவருடைய மறைவு பெரிய இழப்பு’

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close