panels at various levels to prevent encroachment : தமிழக அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு மாநில, மாவட்ட மற்றும் டிவிஷ்னல் அளவில் கமிட்டிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. டிவிஷ்னல் மட்ட கமிட்டிகளுக்கு வருவாய் கோட்டாசியர்கள் தலைமை தாங்குவார்கள் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குழுவானது, பிரிவு வாரியாக ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபனையற்ற ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, கணக்கெடுத்து அறிக்கை அளிப்பது மற்றும் தாலுகா அளவில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு முறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் இக்குழுக்கள், அந்த மாதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய அதிகாரிகள் தலைமை தாங்குவார்கள். மாநில அளவிலான வழிகாட்டுதல் குழுவிற்கு தலைமைச் செயலாளர் தலைமை வகிப்பார். இதர துறை செயலாளர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். நில நிர்வாகத்துறையின் ஆணையர் இந்த குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். மாநில அளவிலான குழுவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம் மற்றும் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், ஊர்ப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, உள்த்துறை துறை செயலாளர்க்கள் மற்றும் டிஜிபி ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil