செங்கல்பட்டில் தொடங்கவுள்ள தொழிற்சாலையில் LGBTQ பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என கோத்ரேஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (டிசம்பர் 7) உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளின் நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் கோத்ரேஜ் நிறுவனம் ரூ.515 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த மாநாட்டில் பேசிய கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா, இந்திய சுதந்திர போராட்டத்தின் சுதேசி காலக் கட்டத்தில் கோத்ரேஜ் நிறுவனம் தொடங்கப்பட்டது. கோத்ரேஜ் குழும தலைவர் அர்தேஷிர் கோத்ரேஜ் இந்த தொழிலை தொடங்கியபோது சில சறுக்கல்கள் இருந்தது.
தற்போது இந்தியாவின் முன்னணி சோப்பு உற்பத்தி தொழிற்சாலையாக செயல்பட்டு வருகிறோம். மார்க்கெட்களில் அதிகமாக விற்பனையாகும் சிந்தால் சோப் எங்களுடையது தான்.
செங்கல்பட்டில் எங்களது புதிய தொழிற்சாலையை அமைக்க இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொழிற்சாலையில் பெண்களுக்கு 50% இடங்களும், LGBTQ பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% பணியிடங்களும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படியே வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தப்போது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக செயல்பட்டு வருவதற்காக அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தேன். இவ்வாறு நிஷாபா உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“