அ.தி.மு.க-வில் தனக்கான அடிப்படை மரியாதை இல்லை என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னையில், இன்றைய தினம் (பிப் 10) அ.தி.மு.க கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, "இக்கூட்டம் நடைபெறுகிறது என்று நேற்றையை தினம் எனது ஓட்டுநர் கூறினார். அதற்கான நோட்டீஸையும் என்னிடம் வழங்கினார். நான் அந்த நோட்டீஸை பார்க்கவில்லை. கூட்டத்திற்கு செல்லலாம் என்று மட்டும் அவரிடம் கூறினேன்.
இக்கூட்டத்திற்கான அழைப்பை என்னிடம் நேரடியாகக் கூட யாரும் கூறவில்லை. ஒற்றுமையும், நேர்மையும் அனைத்து இடங்களிலும் அவசியமாக இருக்க வேண்டும். என்னை பார்த்ததும் கும்பிடுவதற்கு கூட பலரும் பயப்படுகின்றனர். என் புகைப்படங்களை பேனரில் போடவும் பயப்படுகிறார்கள். இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
தென்சென்னை பொறுப்பாளராக எனக்கு பதவி வழங்கிய பின்னர், என்னால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மிக நாகரீகமாக ஒதுங்கி கொண்டேன். நான் குழு அமைத்து செயல்படுவதில்லை. என்னால் யாருக்கும் தொந்தரவும் இல்லை. நான் கோருவது அடிப்படை மரியாதை மட்டுமே.
என்னை சந்தித்தால், என் பெயரை பேனரில் போட்டால் அவர்களின் பதவி பறிபோய் விடுமோ என அச்சப்படுகிறார்கள். அனைவரும் சிறப்பாக பதவி வகிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்காக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் தலைமைக் கழக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக பார்க்க வேண்டும் என்பது ஒரு வழக்கம்.
ஆனால், கோகுல இந்திராவை சந்தித்தால் பதவி போய்விடும் என்று நினைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களிடம் நான் எதிர்பார்ப்பது அன்பும், பாதுகாப்பும் மட்டும் தான். வேறு எதுவும் எங்களுக்கு தேவையில்லை. யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது, கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தான்.
எனது பெயரை போடக் கூடாது என்று முடிவு செய்யும் அளவிற்கு அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது?" என அவர் தெரிவித்துள்ளார்.