கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சி அளித்த சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிபதிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு ஜனவரி 22-ம் தேதி நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக உத்தரவிட்டனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் பொறியாளர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கோகுல்ராஜ், சுவாதி என்ற பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி தீர்ப்பளித்தது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, மற்றும் இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். இந்த வழக்குகளை விசாரித்த நிதீபதிகள் இதை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றினர்.
இதையடுத்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் அமைப்பு, பாதைகள் உள்ளிட்டவை ஆராய ஜனவரி 22ம் தேதி நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் பிறழ் சாட்சி அளித்த சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உளிட்டோரின் வாதத்திற்காக விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”