வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.
கடந்த 2 நாட்களாக வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அரசு முதல்நிலை காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடி, 105 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களிலும் செய்யாத்துரைக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை தொடர்ந்தனர்.
வருமான வரித்துறையினர் சோதனையின்போது, செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
செய்யாத்துரை கணக்கு வைத்துள்ள வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்துள்ள பணபரிமாற்ற விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வங்கிகளில் இருந்து பெற்றுள்ளனர். நேற்றைய சோதனையில் சென்னையில் கார் பார்க்கிங்கில் மட்டும் 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தே வீட்டின் சுவற்றையும் இடித்து சோதனை நடைபெற்றுள்ளது.
இதுதவிர சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில் செய்யாத்துரை தொடர்பான ஆவணங்களை தேடியபோது, ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணம் செய்யாத்துரைக்கு சொந்தமானதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செய்யாத்துரை, அவருடைய மகன் நாகராஜ் மற்றும் அவர்களது நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், இயக்குனர்களிடம் நேரில் விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது இதற்காக செய்யாத்துரை உள்ளிட்டவர்களுக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளன.