விழுப்புரத்தில் நகை செய்யும் தொழிலாளி ஒருவர் மூன்று நம்பர் லாட்டரி சீட்டால் கடன் தொல்லைக்கு ஆளானதால் குடும்பத்துடன் சையனைடு குடித்து தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அருண் (33) நகை செய்யும் தொழிலாளியான இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், பிரியதர்ஷினி (5), யுவஸ்ரீ (3), பாரதி (1) என மூன்று பெண் குழந்தைகள்.
இந்த நிலையில், அருண் 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்துக்கு அடிமையாகி அதன் மீது ஏற்பட்ட மோகத்தால், அவர் வேலை செய்யும் இடத்திலும், உறவினர்களிடமும் பெருமளவு கடன் வாங்கினார். இப்படி வாங்கிய கடன் ஒரு கட்டத்தில் அதிகமாகி விட்டது. அருணுக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்தபோது கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் அருண் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்திருக்கிறார்.
இதையடுத்து அருண் நேற்று வியாழக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது மூன்று மகள்களுக்கும் சையனைடு கொடுத்துவிட்டு தன் மனைவியுடன் சேர்ந்து சையனைடு குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அருண் வீடியோ ஒன்று எடுத்து தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியிருக்கிறார். அந்த வீடியோ பார்ப்பவர்கள் மனதை பாதிக்கும்படியாக துயரமானதாக இருக்கிறது.
அருண் எடுத்துள்ள 2 நிமிடங்கள் 13 வினாடிகள் கால அளவு கொண்ட அந்த வீடியோவில், அருண் தன் மனைவியை தோளில் சாய்த்துக்கொண்டு பேசுகிறார்.
அதில், “பாஸூ தெய்வங்களே… மனுஷாளுங்களா நீங்க… தெய்வங்களப்பா நீங்க… உங்ககிட்டதான் நான் பாடம் கத்துக்கணும்.. எனக்கு தெரியாதுப்பா அதுலாம் கத்துக்க தெரியாது. கருமாந்திரம் எழவு பிடித்தவன் நான். மனுஷாளுங்ககிட்ட நியாய தர்மம் இல்ல. என் பிள்ளைகள் மூன்று பேருக்கும் சயனைடு கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன்... (அருண் அப்போது வீடியோவில் தனது குழந்தைகளைக் காட்டுகிறார்) இப்போ நானும் சாப்பிடப் போறேன். இதுக்கப்புறம் என்னால ஒண்ணுமே பண்ண முடியாது. ஜாலியா இருங்க... இந்த உலகத்துல நீங்களாவது நிம்மதியா வாழ்ந்துட்டு போங்க... விழுப்புரத்துல மூணு நம்பர் லாட்டரி சீட்ட ஒழிச்சிடுங்கடா அப்பா. என்னமாதிரி ஒரு 10 பேராவது பொழைப்பான்... இங்கு எவனும் யோக்கியன் கிடையாது. நானும் யோக்கியன் கிடையாது. அய்யோ என் பொண்ணுக்கு மூச்சு திணறுதுடா ஏண்டா என்னை இப்படி வாட்டி வதைக்க வச்சிட்டீங்க...
சரி நானும் இன்னும் கொஞ்ச நேரத்துல சாகத்தான் போறேன் பிரச்னையில்லை. தங்கமே என்பார்களே அது நீங்கள்தான்... நீங்க ஃப்ரியா இருங்க ஒண்ணுமில்ல. நியாயமா எதையாவது செய்யுங்களேன். என்னைப்போல கஷ்டப்படுபவர்களுக்கு எதையாவது செய்யுங்களேன். செய்ய மாட்டீங்க இல்ல. பண்ண முடியலைன்னா கூட பரவால்ல… செத்துப் போச்சு. மூணு புள்ளையும் செத்துப்போச்சு. எனக்கும் ஊத்தி வச்சிட்டேன். சரக்குலதான் ஊத்தி வச்சிட்டேன். நானும் என் பொண்டாட்டியும் சாப்பிட்டுட்டு மொத்தமா எங்க வேலைய முடிக்கறோம். ஃப்ரியா இருக்கறோம். வாழ்க்கையில எவனுக்கும் தொல்லை கொடுக்க மாட்டோம். எவனுக்குமே தொல்லை இல்லாமல் செத்துப் போகணும். இங்கு வாழ முடியல...” என்று அந்த வீடியோவில் அருண் பேசுவது பார்ப்பவர்களை கலங்கச் செய்கிறது.
41 வினாடிகள் ஓடும் மற்றொரு வீடியோவில் அருண் சையனைடு குடித்துவிட்ட பிறகு, 2 குழந்தைகள் இறந்த நிலையில், ஒரு குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் காட்சி மிகப்பெரிய துயரமாக இருக்கிறது.
இதையடுத்து, அருண், அவரது மனைவி, குழந்தைகள் சடலங்களை கைப்பற்றிய போலீசார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூன்று நம்பர் லாட்டரி சீட்டால் கடனாளியான அருண் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோகமான சம்பவத்தை தொடர்ந்து, கடலூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.