chennai metro : சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நடேசன் மற்றும் பனகல் பூங்காக்களை, மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்த இருப்பதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. இந்த செய்தியில் உண்மையில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது இயற்கையை நேசிக்கும் சென்னைவாசிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கான முயற்சிகளை எடுத்த பனகல் பார்க் நண்பர்கள் குழுவினரை மக்கள் பாராட்டுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்,கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் லைட் ஹவுஸ்- பூந்தமல்லி வழித்தடத்தில், தி.நகர் நடேசன் பூங்கா மற்றும் பனகல் பூங்காக்கள் இடையே 2 மெட்ரோ ரயில் ஸ்டேசன்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. பேஸ் 2 திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பேஸ் 1 திட்டத்தின் கீழ், செனாய் நகரில் உள்ள திரு.வி.க. பூங்கா, பூந்தமல்லியில் உள்ள நேரு பூங்கா மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா உள்ளிட்டவைகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்தும்.
பேஸ் 2 திட்டத்தில், தி.நகர் நடேசன் பூங்கா மற்றும் பனகல் பூங்காக்கள் கையக்கப்படுத்த இருப்பதாகவும், 119 கி.மீ. தொலைவு கொண்ட இத்திட்டத்தில் 128 ஸ்டேசன்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக,கடந்த திங்கட்கிழமை, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு, தி.நகர் பனகல் பார்க் நண்பர்கள் என்ற அமைப்பு மனு அளித்தது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னையில் இயற்கை எழில் சூழந்த பல இடங்கள் தற்போது வணிகவளாகங்களாகவும், அடுக்குமாடி கட்டடங்களாகவும் மாறியுள்ளன. நடேசன் பார்க், பனகல் பார்க் என சில இடங்களே, தற்போது மிஞ்சியுள்ளன. அதையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அழிக்க திட்டமிட்டுள்ளது கண்டிக்கதக்கது. மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் பாண்டியன் சண்முகம் தெரிவித்துள்ளதாவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நடேசன் மற்றும் பனகல் பூங்காக்களை, மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்த இருப்பதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. இந்த செய்தியில் உண்மையில்லை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.