க.சண்முகவடிவேல்
Trichy | farmer-protest: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு:-
தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு சிப்காட் என்கிற பெயரில் விளை நிலங்களை அபகரிப்பதற்கு தமிழ்நாடு அரசு சட்டத்திற்கு புறம்பாக முயற்சித்து வருகிறது. விவசாயிகள் ஒப்புதல் இன்றி நிலங்களை கையகப்படுத்தவும், இடையூறாக இருக்கும் ஏரி,குளம், குட்டை ,ஆறுகள் உள்ளிட்ட நீர்வழி பாதைகளை அபகரித்துக் கொள்ளவும் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம்- 2023 என்கிற கருப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டத்தை பயன்படுத்தி விவசாயிகளுடைய விளை நிலங்களை சட்டவிரோதமாக கைப்பற்றுவதற்கு தீவிரமான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே மேல்மா கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிறுகுறு விவசாயிகளிடம் காவல்துறையை வைத்து அச்சுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து 161 நாட்கள் தொடர் அகிம்சைவழி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும், முன்னணி நிர்வாகிகளையும் கடந்த 4ம் தேதி கைது செய்து பல்வேறு சிறைகளில் அடைத்துள்ளது.
தீபாவளி பண்டிகை கூட கொண்டாட விடாமல் அடக்குமுறை ஏவி உள்ளது. எந்தெந்த சிறைகளில் யார் அடைக்கப்பட்டுள்ளர் என்ற விபரம் கூட குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்து அச்சுறுத்தி வருகிறது. திடீரென நேற்று ஏழு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வந்திருக்கிற செய்தி முதலமைச்சருக்கு தெரிந்து நடைபெற்றிருக்கிறதா?. இல்லை முதலமைச்சர் அனுமதி பெறாமல் நடைபெற்றதா? என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு அடக்க நினைப்பது தமிழ்நாடு அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை வெளிப்படுத்துகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மேல்மா கிராமத்து விவசாயிகளிடம் வாக்கு கேட்க சென்ற இந்நாள் முதலமைச்சர் அன்று எதிர்க்கட்சித் தலைவரான மு க ஸ்டாலின், நான் ஆட்சிக்கு வந்தால் இந்த சிப்காட் திட்டத்தை கைவிடுவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தார். இன்றைக்கு காவல்துறையை வைத்து கொடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டு விவசாய நிலத்தை அபகரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு துணை போவது விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும்.
எனவே, உடனடியாக தமிழ்நாடு அரசு குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதை திரும்பப் பெற்று, விவசாயிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும். குடும்பத்தார்களிடம் சாராயம் விற்றார்கள். சமூக விரத செயலில் ஈடுபட்டார்கள் என தான் போட்ட குண்டர் சட்ட வழக்கை நியாயப்படுத்துவதற்கு வலுக்கட்டாயமாக குடும்ப பெண்களிடம் கையெழுத்து வாங்குகிற நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது குறித்து உடனடியாக ஒட்டுமொத்த தமிழ்நாடு விவசாயிகள் ஒன்று படுத்தும் விதமாக நாளை திருச்சியில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களும் ஒன்று கூட உள்ளோம். இதுவரையிலும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஒன்று கூடல் நிகழ்வு நடந்ததாக இல்லை. எனவே, இந்த குண்டர் சட்டம் என்பது அனைவரையும் ஒன்றுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. எனவே, எங்களுடைய அடுத்த கட்ட தீவிர போராட்டத்தை நாளைய தினம் அறிவிக்க உள்ளோம். அந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகள் விவசாயிகள் துணை வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.