குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை வரும் 19 ஆம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பிக்கிறது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 23 ஆம் தேதி சென்னை மெரினாவில் இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையை கண்டித்து நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். காவல்துறை அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்திய திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமுருகன் உள்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று (செப்.13) நீதிபதிகள் ஏ. செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் வழக்கின் தீர்ப்பை 19 ஆம் தேதி அளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.