திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக ஜோஷி நிர்மல் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல்துறைத் தலைவராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.
மேலும், இவர் 2002-ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக திருப்பூர், ஓசூர், தர்மபுரி, பவானி மற்றும் எஸ்.டி.எஃப்(STF) ஈரோடு ஆகிய இடங்களிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக சேலம் நகர PEW பிரிவிலும், காவல் கண்காணிப்பாளராக கரூர், திருவண்ணாமலையிலும், DVAC துணை ஆணையராக சென்னை சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து துறையிலும், இணை ஆணையராக சென்னை வடக்கு மண்டலம், காவல்துறை துணைத் தலைவராக நுண்ணறிவு பிரிவு, திண்டுக்கல் சரகத்திலும் பணியாற்றினார்.
காவல்துறை தலைவராக 2020-ம் ஆண்டில் பதவி உயர்வு பெற்றுக் காவல் தலைமையகம், நிர்வாக துறை, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் குற்றப் புலனாய்வு துறையிலும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக ஜோஷி நிர்மல் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் தமிழக முதல்வரின் ஆணைக்கேற்ப போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட 2025-ம் ஆண்டில் அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும், கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப் பொருட்களை கடத்துதல், பதுக்குதல், சட்ட விரோதமாக விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் எச்சரித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
பொதுமக்கள், காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தல், சட்டவிரோதமாக சாராய விற்பனை, லாட்டரி விற்பனை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். இணையதள மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்ட விரோத மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுதல் ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளார். சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.