திமுக எப்போது எந்தப் போராட்டத்தை அறிவித்தாலும், முதல் நபராக ஆதரவுக் கரம் நீட்டுபவர் சிறுத்தைத் தலைவர்தான்! ஆனால் அண்மையில் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 27-ல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தபோது, சிறுத்தை முகாமில் இருந்து பேச்சு மூச்சு இல்லை.
அதே சமயம், புதிதாக திமுக.வுடன் இணக்கமாகியிருக்கும் ‘புலி’த் தலைவர் உடனடியாக ஆதரவு கேட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காவது அனைத்து கூட்டணிக் கட்சிகளிடமும் போனிலாவது செயல் தலைவர் ஆதரவு கேட்டார். ஆனால் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து நடக்கும் போராட்டத்திற்கு கூட்டணித் தலைவர்களிடம் தனது அறிக்கையில்கூட ‘செயல்’ ஆதரவு கேட்கவில்லை.
அப்படி கேட்கும் முன்பே, ‘புலி’ ஆதரவு கொடுத்ததில் இதர கூட்டணிக் கட்சிகளுக்கு வருத்தம்! பின்னர் வேறு வழியில்லாமல் இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் மற்றும் ‘ஒரு சீட்’ கட்சிகள் பலவும் வரிசையாக ஆதரவு அறிக்கைகள் விட்டபடியே இருந்தன. அப்போதும் சிறுத்தைகள் முகாமில் சத்தமே இல்லை.
திடுதிப்பென யாரும் எதிர்பாராதவிதமாக சிறுத்தைகள் சார்பில் தனிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி சென்னையில் சிறுத்தைத் தலைவர் பங்கேற்றப் போராட்டம் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இடையில் பத்திரிகையாளர் ஞானிக்கான அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றில் செயலும், சிறுத்தையும் சந்திக்க நேர்ந்தது. இதில் நெருடல் ஏற்படக்கூடாது என நினைத்தோ என்னவோ, கடைசியாக ‘திமுக போராட்டத்திலும் பங்கேற்போம்’ என அறிவித்திருக்கிறது சிறுத்தை.
சரி.. ‘புலி’ ஏன் இவ்வளவு வேகமாக பாய்கிறது? என விசாரித்தால், கிடைக்கிற தகவல் சுவாரசியமானது. திமுக.வுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே உருவான அணியில் இருந்து ‘புலி’யை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு மற்றவர்கள் எல்லாம் முன்கூட்டியே திமுக அணியில் சங்கமம் ஆனார்கள். அந்தக் கோபம் இந்தக் கட்சிகள் மீது ‘புலி’க்கு இருக்கிறது.
இப்போது தனி ஆளாக செயல் தலைவருடன் இணக்கம் ஏற்படுத்திக் கொண்ட புலி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடையும் பேசி முடித்துவிட்டதாக கூறுகிறார்கள். சிவகாசி, ஈரோடு என இரண்டே தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தகவல்! இப்படி தொகுதிப் பங்கீடு உறுதியானதால்தான் புலி அதிரடி பாய்ச்சலில் ஆதரவு கொடுக்கிறது.
முன்கூட்டியே அணிக்கு வந்தவர்களுக்கு திமுக இதுவரை எந்த வாக்குறுதியும் கொடுக்க வில்லை. ஆனால் லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா தொகுதி பங்கீடு வரை ‘புலி’க்கு முக்கியத்துவம் கிடைப்பதை அறிந்து சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் சீறிக்கொண்டு நிற்கின்றன.
இதற்கிடையே சிறுத்தை மட்டுமல்ல, காங்கிரஸும்கூட திகார் வரை போய்வந்த அதிமுக அதிருப்தி தலைவரை ஒரு ‘சாய்ஸ்’ஸாக வைத்திருக்கின்றன. திமுக ‘கெத்து’ காட்டினால், மீண்டும் ஒரு மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிவிடுவோம் என மறைமுகமாக இந்தக் கட்சிகள் மிரட்ட ஆரம்பித்திருப்பதாக தகவல்!