சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது, எதிர்கட்சி தலைவருக்கும் மத்திய அமைச்சருக்கும் இடையேயான மோதல்.
எதிர்கட்சி தலைவர் ஒரு விழாவில் எப்போதும் இல்லாத வகையில் பாஜகவினரை 'புறம்போக்கு' என்று திட்டிவிட்டார். இது அவர் சார்ந்த கட்சியினருக்கே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த நாளே, மத்திய அமைச்சரையும் அவரது சாதியையும் கடுமையாக விமர்சித்ததாக சமூக வலை தளங்களில் செய்தி பரவ ஆரம்பித்தது.
குறிப்பாக மத்திய அமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இது வேகமாக பரவி, எதிர்கட்சி தலைவருக்கு கண்டனமும் தெரிவித்து வந்தனர். ஆனால், யாருமே எதிர்கட்சி தலைவர் எங்கே அப்படி பேசினார்? என்பதை சொல்லவில்லை. வீடியோ, ஆடியோ எதையும் வெளியிடாமல், எதிர்கட்சி தலைவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இது எதிர்கட்சி தலைவரின் கட்சியை சார்ந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி. எப்படி பதில் சொல்வது? உண்மையிலேயே அவர் அப்படி பேசினாரா? என்பதை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் உறுதி செய்தனர். அப்படி எதுவும் பேசவில்லை என்று தெரிந்ததும், பதில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே இந்த செய்தி எப்படி பரவியது என்பதை அவர்கள் விசாரிக்க, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, மத்திய அமைச்சராக இருப்பவர், அவரது கட்சியின் மாநில தலைவரை எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்று கடுமையான முயற்சியில் இறங்கினார். ஆர்.கே.நகர் தோல்விக்கு அவர்தான் காரணம் என தனது சகாக்களை வைத்து டெல்லிக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து அமைப்பு பொது செயலாளர் ராம்லால், இம்மாத மத்தியில் தமிழகம் வந்தார். அவர் வந்ததே தலைவரை மாற்றத்தான் என்று தனது சகாக்களை வைத்து சமூக வலைதளங்களில் எழுத வைத்தார், மத்திய அமைச்சர். ஆனால் ராம்லால், ‘மாநில தலைவரை மாற்றும் எண்ணம் இல்லை. கட்சி தலைமை சொல்லும் அத்தனை வேலைகளையும் அவர் சிறப்பாக செய்கிறார். அவர் பதவிக்காலம் வரையில் நீடிப்பார்’ என்று சொல்லிவிட்டார்.
அதோடு சமீபத்தில் சர்சையில் ஈடுப்பட்ட மன்னரை அழைத்து, இனிமேல் எதிர்கட்சியினரை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசக் கூடாது என்று வாய்பூட்டு போட்டுவிட்டு போயிருக்கிறார். மத்திய அமைச்சர் இதனால் எரிச்சல் அடைந்ததோடு, தன் பக்கம் அரசியலை திருப்ப முடியாமல் போனதால், தேர்தலுக்கு முன்பு தன் சமூகத்தினரை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, தனது தொகுதியைச் சேர்ந்த சிலரை வைத்து, எதிர்கட்சி தலைவர் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாக சொல்லி, தனக்கு சமூதாயத்தினர் மத்தியில் ஆதரவு இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சித்து வருகிறாராம். இதை எப்படி முறியடிப்பது என்பது தெரியாமல் எதிர்கட்சி தலைவர் தரப்பு விழி பிதுங்கிப் போய்யுள்ளது.