அடடே... அப்படியா! காரிலேயே ஆலோசனை நடத்தும் ரஜினி

உளவுத்துறை போலீசாரின் பார்வையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்த ரஜினிக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது.

போயஸ் கார்டனே மீண்டும் தமிழகத்தின் அதிகார மையமாகலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதா போயஸ்கார்டனில்தான் குடியிருந்தார். அவர் இறந்த பின்னர் அந்த வீட்டில் குடியிருந்த சசிகலாவால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவியது.

இப்போது போயஸ் கார்டனில் குடியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருடைய அறிவிப்புக்கு பின்னர் உளவுத்துறை போலீசார் போயஸ் கார்டன் வீட்டை சுற்றி வருகிறார்களாம். ஆனால் ரஜினியோ, எந்த ஒரு ஆலோசனையும் போயஸ் கார்டன் வீட்டில் வைத்துக் கொள்வதில்லையாம்.

எந்த ஆலோசனையாக இருந்தாலும் ராகவேந்திரா மண்டபத்திலோ அல்லது கேளம்பாக்கம் பண்ணைவீட்டிலோ தான் நடத்துகிறார். இப்போது அந்த இரண்டு இடங்களிலும் உளவுத்துறை போலீசார் சுற்றி சுற்றி வருகிறார்கள்.

உளவுத்துறை போலீசாரின் பார்வையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்த ரஜினிக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது. முக்கிய ஆலோசனை ஏதாவது நடத்த வேண்டும் என்று அவர் நினைத்தால், ஏதாவது ஒரு காரில் அவர்களை ஏற்றிக் கொண்டு, அங்கேயே ஆலோசனையை முடித்துக் கொண்டு, வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு போய்விடுகிறாராம். ஓரே காரை அவர் பயன்படுத்துவதில்லையாம். அவர் வீட்டிலிருந்து கிளம்பும் காரில் இருந்து பாதிவழியில் இறங்கி வேறு காரில் ஏறிவிடுகிறாராம். கார் நேராக ராகவேந்திரா மண்டபத்துக்கு போய்விடுகிறதாம்.

ஆலோசனை முடிந்ததும், சம்பந்தப்பட்டவரை வீட்டிலேயே இறக்கிவிட்டுவிட்டு, மண்டப்பத்திற்கு செல்கிறாராம். அங்கிருந்து தன்னுடைய காரில் வீட்டுக்கு செல்கிறாராம். இதனால் அவர் யாரை பார்க்கிறார்? என்ற விபரம் தெரியாமல் உளவுத்துறை தவிக்கிறதாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close