மகாத்மா காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகளுக்குப் பிறகும் காந்தி மீதான கோபம் வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலதுசாரி சக்திகள் அவரை இழிவுபடுத்துவது தொடர்கதையாகி விட்டது என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 23-ம் தேதி கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "1942-க்குப் பிந்தைய காலகட்டத்தில் காந்தியின் தலைமையிலான தேசிய சுதந்திர இயக்கம் செயலற்றதாக இருந்தது. நேதாஜி இல்லாமல் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்காது. நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை" என்று பேசினார். ஆளுநர் ரவியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள், தி.க, தி.முக. வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாம் கூறிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், காந்தியை அவமதிக்கவில்லை என்றும் ஆளுநர் விளக்கம் அளித்தார். இந்தநிலையில், நாளை (ஜன.30) காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்றைய தினம் மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், “என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் தன்னைப் போலவே அனைத்து மதத்தவர் உணர்வுக்கும் மரியாதை கொடுத்தவர் அவர். அனைத்து மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவை என்றவர் அவர்.
ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார். 75 ஆண்டுகள் ஆன பிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதையாகி விட்டது.
‘காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான்.
தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளை, பொய்களாலும் அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். இது நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும்.
மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழகத்துக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. எனவே, ஜனவரி 30-ம் நாளன்று மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற அண்ணல் காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள். அண்ணல் காந்தி அடிகளின் பிறந்தநாளை ‘சுவச்ச பாரத் அபியான்’ என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2-ம் நாள் ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசைதிருப்ப பார்த்தது. அதனைத் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும், மக்களின் மனதில் குடியிருக்கிறார் அண்ணல் காந்தி.
நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 அன்று மாவட்டக் கழகங்கள் (திமுக-வினர்) நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டையும், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற தமிழகத்தின் மாண்பையும் இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும்.
மதவெறியை மாய்ப்போம், மனித நேயம் காப்போம்! வாழ்க அண்ணல் காந்தியின் புகழ்” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.