குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கன்னியாகுமரிக்கு இரண்டு நாட்கள் முன்பு வருகை தந்த போது அவரை வரவேற்க அங்கு சென்ற ஆளுனர் ஆர்.என் ரவி தொடர்ந்து சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதிக்கு சென்றார். சாமித்தோப்பின் ஆன்மீக முறைப்படி தலைமை பொறுப்பாளர், வழக்கறிஞர் பாலஜனாதிபதி ஆளுநர் ரவியை வடக்கு வாசலில் வைத்து தலைப்பாகை கட்டி, நெற்றியில் திருநாமம் இட்டு வரவேற்றார். அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்கு வாசல் பகுதி மற்றும் பள்ளியறையில் அய்யா வைகுண்டர் சாமியை வழிபாடு செய்தார்.
Advertisment
அய்யா வைகுண்டர் போதித்த சமத்துவ நெறி, மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு இல்லை. அனைவரும் சமம். உன் உள்ளே இறைவன் இருக்கிறான் உள்ளிட்ட அய்யாவின் உயர்ந்த தத்துவத்தை பாலஜனாதிபதி ஆளுனருக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து கூறுகையில், "தர்மம் கீழே விழும்போது அதனை நிலைநாட்டி, அந்த சூழலை சுமூகமாக மாற்றி மனிதன் மட்டுமே வாழ வழி வகைகள் செய்யப்படாமல், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கு தேவை ஏற்படும் பொழுது அய்யா வைகுண்ட சாமி தோன்றினார். அய்யா வைகுண்டர் வாழ்ந்த காலத்தில் தீண்டாமை கொடுமை இந்த பகுதியில் கோலூன்றி நின்றது. இது வெட்க்கப்பட்டு தலை குனிய வேண்டிய விஷயம். கடவுள் மனித உருவில் தோன்றி இதனை சரிசெய்ய முடியும்.
மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு நிலவியதை மனிதனாக பிறந்த ஒருவர் இந்த சமூகத்தை சீர் செய்தார். அய்யாவின் போதனையை மனித சமூகம் ஏற்று அதனை பின் பற்றி வழி நடப்பதே அய்யா வைகுண்டர் பெற்ற வெற்றியின் அடையாளம் என்று ஆளுனரிடம் விளக்கி " கூறினார்.
தொடர்ந்து தலைமை பொறுப்பாளர் வழக்கறிஞர் பாலஜனாதிபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆளுனர் இங்கு வருவது குறித்து முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை. அவரது நிகழ்ச்சி பட்டியலிலும் இடம்பெற வில்லை. மார்ச் 17-ம் தேதி இரவு 9 மணி அளவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரி ஒருவர் அழைத்து பேசினார். மார்ச் 18-ம் தேதி காலை 7 மணிக்கு தமிழக ஆளுனர் உங்கள் தலைமை பதிக்கு வர விரும்புகிறார்கள் என தெரிவித்தார். நாங்கள் மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றோம். தொடர்ந்து தரிசனத்திற்குப் பின் ஆளுனருக்கு தலைமை பதி சார்பில் அகில திரட்டை வழங்கப்பட்டது" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/