பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம், தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டு அழைப்பிதழ் வெளியாகி இருந்தது சர்ச்சையான நிலையில் தற்போது ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய போது திராவிடம், பெண்ணுரிமை, அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்து விட்டு பேசினார். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்றும் தமிழ்நாடு அரசின் இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு என எதுவும் இடம்பெறாமல் வெளியானது. இதையடுத்து தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் பொங்கல் விழாவை புறக்கணித்தன. அதோடு தி.மு.க எம்.பிக்கள் குழு ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதி முர்முவிடம் மனு அளித்தனர்.

அதன் பின்னர், ஆளுநர் தமிழகம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விடுத்துள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி எனக் குறிப்பிட்டு அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் திருவள்ளுவர் ஆண்டு, தமிழ்நாடு அரசின் இலச்சினை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil