2023-ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 9) தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் காலை 10 மணிக்கு கூட்டத் தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் எப்போதும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டின்
சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது.
ஆளுநர் உரை தொடங்கியபோதே தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். அண்மையில் ஆளுநர் ரவி தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்று கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் ஆளுநர் உரை கடும் அமளிக்கு பிறகு தொடங்கியது.
தமிழில் தனது உரையை தொடங்கி பேசிய ஆளுநர், நீட் தேர்வு ரத்து மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப பட்டுள்ளதாக கூறினார். மேலும் நீட் தேர்வு கிராம புற மாணவர்களின் உரிமைகளை பறிக்கிறது என்றும் கூறினார். தொடர்ந்து ஆளுநர் தனது உரையில் கூறப்பட்டிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்து விட்டு படித்தார். இறுதியில் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி உரையை முடித்தார்.
இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது ஆளுநர் தனது உரையை முழுமையாக படிக்கவில்லை என்று கூறி பேசினார். இந்தநிலையில், ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். சட்டமன்ற நடவடிக்கைகள் முடிவதற்கு முன்பாக ஆளுநர் வெளியேறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க எம்.ஏல்.ஏக்களும் பேரவையை விட்டு வெளியேறினர். ஆளுநர் மரபை மீறி செயல்பட்டுள்ளார் என ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். ஆளுநருக்கு எதிராக தி.மு.க உறுப்பினர்கள் தீர்மானத்தை முன்மொழிந்தனர். அச்சிடப்பட்ட ஆங்கில உரை மற்றும் தமிழ் உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற வேண்டும். அச்சிடப்பட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறக் கூடாது எனத் தீர்மானம் கொண்டுவந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/