Advertisment

குடிநீர் தொட்டியில் மலம்.. பிரிவினைவாத அரசியல் தவிர்க்கப்பட வேண்டும்: ஆளுநர் ரவி பேச்சு

மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக நீதி சார்ந்த பிரச்சனைகள் நிலவி வருகிறது. பிரிவினைவாத அரசியலை தவிர்த்தால் தான் சமூக பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Gov RN Ravi

Gov RN Ravi

கோவையில் உள்ள கே.ஜி. பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் (KGISL) வளாகத்தில் நேற்று (ஏப்ரல் 5 ) நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். கோவை கே.ஜி மருத்துவமனை மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல் உள்ளிட்ட கே.ஜி குடும்ப நிறுவனங்கள் சார்பில் கே.ஜி பவுண்டேஷன் அமைப்பு பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

Advertisment

கே.ஜி மருத்துவமனையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'Dynamic Indian of Millenium', 'Personality of the Decade' என இரண்டு விதமான விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த 11 ஆளுமைகளுக்கு விருதுகள் இந்தாண்டு வழங்கப்பட்டது. கே.ஜி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர்.ஜி.பக்தவச்சலம், கே.ஜி மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவச்சலம் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

publive-image

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர் பேசியதாவது, "சமூகத்திற்கு பல்வேறு வகையில் பங்களிப்புகளை செலுத்தி வரும், இன்று விருது பெற்ற ஆளுமைகளுக்கு எனது வாழ்த்துகள். இவர்கள் போன்று பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிபவர்களால் தான் இந்தியா உருவாக்கப்படுகிறது. கே.ஜி நிர்வாகத்தினர் 50 வருடங்களுக்கு முன்பே மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என முடிவெடுத்து சேவை செய்து வருகின்றனர். ஸ்ரீ ராமர் குறித்து எழுத வேண்டும் என கம்பர் எண்ணியது போல், இந்த சமூகத்திற்கு உன்னதமான சேவையை வழங்க வேண்டும் என இந்நிறுவனத்தின் நிறுவனர் எண்ணியுள்ளார்.

இந்த நிறுவனம் சிறப்பான சேவையை தற்போது வரை வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் நமது நாட்டு மக்களுக்கு மருத்துவம், கல்வி ஆகியவை கிடைக்காத சூழல் இருந்து வந்தது. அடிப்படை தேவைகள் கிடைக்காமல் வறுமை நிலவி வந்தது. இதனைப் பூர்த்தி செய்ய பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் அமைக்கப்பட்ட போதும் சில மக்களுக்கு மருத்துவ சேவையை கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பும் ஆங்கிலேயர்களின் எண்ணத்தை போன்றே நமது நாட்டை மொழியாலும், இனரீதியாகவும் பிரித்த கண்ணோட்டம் நிலவி வந்ததே இதற்கு காரணம்.

சமூக நீதி

இந்த நிலையில் இந்தியாவை ஒரே நாடாக கருதி பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்பு இந்த நிலைமை மாறியுள்ளது. மருத்துவம், கல்வி, குடிநீர், கேஸ் எரிவாயு, வீடு ஆகியன அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி நடைபெற்று வருகிறது. உலகின் மிகச்சிறந்த டிஜிட்டல் சேவைகள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இன்று இணையதள பயன்பாடு அனைவருக்கும் சென்றுள்ளது. தனி மனிதரின் இணையதள பயன்பாட்டு அளவு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அனைத்து பகுதிகளுக்கும் தொழில்நுட்பங்களை கொண்டு சென்றதும், அவற்றின் விலையை குறைத்ததும் தான். உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியாவை உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன. இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதமாக மகளிர் சக்தி உள்ளது. மகளிர் சுகாதாரம், அவர்களுக்கான கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

publive-image

சமூக நீதிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும், மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக நீதி சார்ந்த பிரச்சனைகளையும் செய்தித்தாள்களில் காண முடிகிறது. ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவினைவாத அரசியலை தவிர்த்தால் தான் சமூக பிரச்சனைகளை சரி செய்ய முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருத வேண்டும். அந்த வகையில் தான் மருத்துவ காப்பீடு திட்டமாக 5 லட்சம் ரூபாய் வழங்கும் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 18-ம் நூற்றாண்டு வரை இந்தியா உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்துள்ளது. அதற்குப் பிறகான பிரிவினைவாத அரசியலால் தான் நமது நாடு பின்தங்கி இருந்தது.1951-ம் ஆண்டில் இருந்த சாதிப் பிரிவுகள் இன்று இரட்டிப்பு எண்ணிக்கையாக அதிகமாகியுள்ளது. அது சார்ந்த பிரச்சனைகளும் அதிகமாகியுள்ளது.

சாதிகளும் சாதிக்குள்ளான உட்பிரிவுகளும் போன்ற பிரிவினை எண்ணங்களும் நமது நாட்டை பாதித்து வருகின்றன. நாம் அனைவரும் ஒரே மரத்தின் இலைகளைப் போன்றவர்கள். ஒரே குடும்பத்தினர்.மொழி, நிலம், இனம் ஆகியவற்றை தாண்டி நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருத வேண்டும். அதை நோக்கி தான் இந்தியா சென்று வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடாக திகழும். இது மக்களின் பங்களிப்பால் தான் சாத்தியமாகும். தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் என பல்வேறு துறைகளில் இந்தியா தலைமைத்துவத்தில் உள்ளது. இதில் நமது நாட்டின் இளைஞர்களின் பங்கு முக்கியமாக உள்ளது. நமது நாடு 100-வது சுதந்திரத்தை கொண்டாடும் சூழலில் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமையாக திகழும்" என்று ஆளுநர் பேசினார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment