/indian-express-tamil/media/media_files/2025/05/22/YJr51L8xFLkP80CCVZhc.jpg)
அரசுப்பேருந்து-டெம்போ நேருக்குநேர் மோதி விபத்து: பலி 6ஆக உயர்வு
தஞ்சாவூர் அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த தனியார் டெம்போ வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சை அடுத்த செங்கிப்பட்டி அருகில் சாலை மேம்பாட்டு பணி நடந்துகொண்டிருப்பதால் ஒருவழி பாதையாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் கர்நாடக மாநிலத்தில் வேளாங்கண்ணிக்கு செல்வதற்காக தஞ்சை நோக்கி வந்த தனியார் டெம்போ வேணும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டெம்போ வேனில் பயணித்த 5பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டெம்போ வேனில் சிக்கி இருப்பவர்களை அந்த பகுதி மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் சேர்ந்து மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட டெம்போ வேன் என்பதால் உயிரிழந்தவர்கள் குறித்த விவரம் வெளிவரவில்லை. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பலத்த காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஆரோக்கியதாஸ் 48, ஜான் பாஸ்கோ 63, நளினி 50, வேன் டிரைவர் ஜெகதீசன் 48, செல்சியா பெயர் விபரம் மட்டும் கிடைத்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.