திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திட்டக்குடியை அடுத்துள்ள ஆவட்டி என்ற இடத்தில் நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
மன்னார்குடியை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி கவுசல்யா. இவர்களது மகள் சாரா. இவர்கள் தற்போது தஞ்சாவூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மதிவாணனின் உறவினர் இல்ல திருமணம் சென்னை வடபழனி பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதிவாணன் வரது மனைவி கவுசல்யா, மகள் சாரா, மாமனார் துரைராஜ், மாமியார் தவமணி ஆகியோர் ஒரு காரில் சென்னை வடபழனிக்கு சென்றனர்.
அங்கு திருமண விழாவில் பங்கேற்று விட்டு நேற்று இரவு சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர். வரும் வழியில் செங்கல்பட்டு பகுதியில் உள்ள மதிவாணனின் தங்கை தேவி வீட்டுக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டனர்.

அவர்கள் வந்த கார் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி கிராமம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது காருக்கு பின்னால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் மதிவாணன், அவரது மனைவி கவுசல்யா, மாமியார் தவமணி, மகள் சாரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். விபத்து நடந்த இடம் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது.
இது பற்றி தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய மதிவாணனின் மாமனார் துரை என்பவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அங்கு பலியாகி கிடந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் மன்னார்குடியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் மன்னார்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்