கஜ புயல் பாதிப்பு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் கட்டணம் வசூலிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில் பெரும்பாலான பகுதி விளைவது டெல்டா மாவட்டங்களில் தான். அத்தகைய பகுதியை தான் கடந்த வாரம் கஜ புயல் சீர்குலைத்தது. டெல்டா பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் உடமைகள் மட்டுமின்றி உறவுகளையும் கஜாவிற்கு இறையாக கொடுத்துவிட்டு தவித்து வருகின்றனர்.
பெற்ற பிள்ளைகள் போல் வளர்த்த தென்னைகளும் கால்நடைகளும் மடிந்து இறந்து போக, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், உடுத்த வேறு உடை இல்லாமல் சேதமடைந்த வீடுகளுக்கு வெளியே விடியலை நோக்கி ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எத்தனையோ உதவிக் கரங்கள் தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை திரட்டி பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
நிவாரண பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கும் அரசு பேருந்துகள்
இவர்களின் நிவாரண பொருட்கள் யாவும் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு சென்றடைய, சில தனியார் பேருந்து நிறுவனங்கள் இலவசமாக உதவி வருகிறது. பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் என தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகள் இலவசமாக நிவாரண பெருட்களை கொண்டு சேர்கின்றது.
இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு அல்லது அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகள் நிவாரண பொருட்களை எடுத்துச் செல்ல கட்டணங்களை வசூலித்து வருகிறது. வருமானத்தில் கவனம் செலுத்தும் தனியார் நிறுவனங்கள் கூட மக்களின் அவல நிலைகளில் கைக் கொடுக்கும்போது, மக்களுக்கு உதவும் கடமையில் இருக்கும் அரசு இதை ஏன் கவனிக்காத நிலை உள்ளது என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.