போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்கு வராத நாட்கள் பணம் பிடிக்கப்பட்டு பிப்ரவரி 4ம் தேதி சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
தாமதமாகும் அரசு ஊழியர்கள் சம்பளம்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த வேண்டுகோளை ஏற்று 9 நாட்களுக்கு பிறகு போராட்டம் கைவிட்டனர். பின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கும் திரும்பினார்கள்.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், கருவூலத்துறையில் இருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சம்பளப் பட்டியல் திரும்ப பெறப்பட்டது.
பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கான ஊதியம் பிடிக்கப்பட்டு சம்பள பட்டியலை வங்கிகளுக்கு அனுப்பும் பணியை தற்போது தொடங்கியுள்ளனர். இதனால் ஜனவரி மாத ஊதியம் நேற்று வழங்குவதில் சிக்கலும் கால தாமதமும் ஏற்பட்டது. எனவே அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், பிப்ரவரி 4ம் தேதி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.