திருச்சியில், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மின்வாரிய அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கே.கே. நகர் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், அதே பகுதியில் தனது பெயரில் இறகுப்பந்து மைதானம் அமைப்பதற்கு முன்முனை மின்சார இணைப்பு கோரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதன்பேரில், மின்சார இணைப்பு கிடைத்தும் அதற்குரிய மீட்டர் கிடைக்காத சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் என்பவரை அணுகியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சீனிவாசனிடம், சந்திரசேகர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் சீனிவாசன் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சீனிவாசனிடம் இருந்து உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக பெற்றுக் கொண்டது கண்டறியப்பட்டது. அந்த பணத்தை தனது தனிப்பட்ட உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் சந்திரசேகர் கொடுத்துள்ளார். அப்போது, சம்பவ இடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், இருவரையும் கைது செய்தனர்.
செய்தி - க.சண்முகவடிவேல்