சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர்கள் தங்களது கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் சூழலில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்.19) எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய ஓ. பன்னீர் செல்வம், “மீனவர்கள் தொழில் செய்ய மெரினா லூப் சாலையை பயன்படுத்துவத்தற்கு வழிவகை செய்ய வேண்டும். மீனவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பேசினர். இதற்கு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், “நொச்சிக் குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்ட சிறிய அளவிலான நடவடிக்கை இது. மீனவர்கள் தொடர்பான பிரச்சினை இன்று காலையோடு முடிவுக்கு வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
பிரச்சனை என்ன?
முன்னதாக, சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக நீதிமன்றம் விசாரணை நடத்தியது. ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்து விடுவதாலும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
நீதிமன்ற உத்தரவையடுத்து நொச்சிக் குப்பம் பகுதியில் சாலையோரம் இருந்த மீன் கடைகளையும், மீன் உணவகங்களையும் சென்னை மாநகராட்சி அகற்றியது. இதனை எதிர்த்து மீனவர்கள் போராட்டம் நடத்த, கடந்த இரண்டு நாட்களாக அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நொச்சிக் குப்பம் சாலையில் படகுகளை நிறுத்தி போக்குவரத்தை 2 நாட்களாக முடக்கினர். இந்த சாலையை பெரும்பாலான அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வந்த நிலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படவே நீதிமன்றம் தாமாக முன் வந்து சாலையில் போக்குவரத்தினை ஒழுங்கு படுத்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதனால் சில நாட்களாக தொடர் போராட்டத்தை நொச்சிக் குப்பம் மீனவர்கள் தொடங்கியதால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது.
ரோடு போட்டு ஆக்கிரமிச்சது அரசு தான்
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர், மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்றார். அதேவேளையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமும் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், மீனவர்கள் சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீனவர்கள் கடைகளை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மீனவர்கள் தெரிவிக்கையில்; “நாங்க நாலஞ்சு தலைமுறையா இங்க இருக்கோம், 40 வருஷத்துக்கு முன்னாடி இங்க ரோடே கிடையாது. ஓலைக்குடிசை போட்டு வாழ்ந்துக்கிட்டு இருந்தோம். சின்ன வண்டி போகுற மாதிரி, தார் ரோடு சின்னதா இருக்கும். ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி, `உங்க நலனுக்காக ரோடு போட்டுத் தர்றோம்-னு சொல்லி, ரோட்டைப் பெருசாக்கி பிளாட்ஃபார்ம் போட்டுக் கொடுத்தாங்க, அதுல இருந்து கார்ப்பரேஷன்காரங்க பிரச்னை பண்றாங்க. இப்ப நீங்க இருக்கக் கூடாது.
சிங்காரச் சென்னையா மாத்தப்போறோம். இங்க நாத்தம் அடிக்குது. இந்த எரியாவுல நீங்க இருக்கக் கூடாது-னு சொல்றாங்க. நாங்க எங்க போறது? எங்க வாழ்வாதாரம் இதுதான். கடலுக்குப் போய் பிடிச்சுட்டு வந்து காலம் காலமா மீன் விக்குறோம். ரெண்டு பக்கமும் கடை போடக் கூடாதுனு சொல்றாங்க. அப்போ நாங்க எங்க போய்ப் பொழைக்கறது, நாங்க எங்கயும் போறதா இல்லை, நாங்க இங்கதான் இருப்போம். எங்க கடைகளை ஆக்கிரமிப்புனு சொல்றாங்க. நாங்க வாழ்ந்துட்டு வந்த இடம் இது. அங்க ரோடு போட்டு ஆக்கிரமிச்சது கவர்மெண்ட்டுதான். இப்போ வந்து `இது ஆக்கிரமிப்பு, கடைய எல்லாம் காலி பண்ண சொன்ன என்னங்க நியாயம். சென்னைல எத்தனையோ கட்டடம் ஆக்கிரமிப்புல கட்டியிருக்காங்க.
அதெல்லாம் தெரியலை அவங்களுக்கு, ஓரமா தார்ப்பாய விரிச்சு கடைபோட்டது ஆக்கிரமிப்பாங்க நீங்களே சொல்லுங்க. சென்னையில யாராவது வி.ஐ.பி., வந்தாங்கன்னா இங்கத்தான் வந்து மீன் கேக்குறாங்க, அமைச்சர் வீட்டுக்கு ஃப்ரெஷ் மீனு வேணும், மாநகராட்சி அதிகாரிங்க பலரும் எங்க வீட்டுக்கு ஃப்ரெஷ் மீனு வேணும்ன்னு அதிகாரத்துல இருக்குறவங்க மீன் வாங்க இங்கேதான வந்தாங்க. கடல் கரை ஓரமா பல வருசமா இங்கேயே பொழப்பு செஞ்ச எங்க வாழ்வாதாரத்துல கையவெச்சா இங்கயே விஷம் குடிச்சுட்டு சாகத்தான் செய்யணும்” என்றனர்.
அரசியல் கூடாது
இதேபோல், நொச்சிக் குப்பம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், களத்தில் மீனவர்கள் முன் வந்து ஆதரவு தெரிவித்து ஆளும் அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அதாவது, “கடல் இருக்கிறது, கரையில் படகு வந்து இறங்குகிறது. அங்கே ஒரு குடைவெச்சு மீன் விக்குறாங்க, இதில் என்ன பிரச்சனை, கடற்கரையில மீன் விக்கக் கூடாது, ஆனா, பேனா சிலை வைக்கலாமா? கடற்கரை ஓரத்துல மீன் சந்தை போடக் கூடாது. ஆனா, சமாதி இருக்கலாமா? மக்களின் கடைகளை காலி செய்வதில் இவ்வளவு தீவிரம் காட்டுகிறீர்களே?
நீதிமன்றம் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றிவிட்டீர்களா? இவங்க இங்க மீன் விக்குறதுனால யாருக்கு, என்ன இடையூறு வந்ததுன்னு சொல்லுங்க’’ எனக் கொந்தளிக்க நொச்சிக் குப்பம் போராட்டக்களம் ஜல்லிக்கட்டு போராட்டக் களமாக உருவெடுக்கும் நிலையாக மாறத் துவங்கியது. சமூக ஆர்வலர்கள், எதிர்கட்சிகள் என பலரும் ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்க நீதிமன்றமோ தாமாகவே எடுத்த வழக்குக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
மீனவர்களின் சாலை மறியல் பிரச்சனை தீவிரமடைந்து அரசியலாக்கப்படும் சூழலில் நீதிமன்றம் இந்தப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மீனவர்கள் இதை அரசியலாக்க வேண்டாம் எனக்கூறியதோடு, மீனவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதை ஏற்க முடியாது எனக்கூறி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீனவர்கள் கடைகளை அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்து நொச்சிக் குப்பம் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
செய்தி: க.சண்முகவடிவேல்