மார்ச் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை கவனமுடன் பின்பற்றி 2025- 26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் மார்ச் 01 முதல் தொடங்கிட வேண்டும். இதுகுறித்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5+ வயதுடைய குழந்தைகளை அந்தந்தக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் (Habitation and Catchment Area) சேர்க்கை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுய ஆர்வலர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி மாணவர் சேர்க்கைப் பணிகளை சிறந்த முறையில் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்கள் அல்லது வேறு பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு அல்லாத பிற வகுப்புகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் மாணவர்களுக்கும் பள்ளிகளில் சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.