மாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்கள் செய்த பெருந்தன்மையான செயல்... தலைவணங்கும் பெற்றோர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களின் நலனை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செய்த செயல் பெருந்தன்மையானது.

தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல வகையான நிறைகளும் குறைகளும் இருப்பது வழக்கம். அதிலும் சமீப காலமாக அரசுப் பள்ளிகளின் மீதான மெத்தனப்போக்கை மாற்றி வருகிறது ஆசிரியர்களின் செயல். ஆசிரியர் பகவான் பணியிட நீக்கம் எதிர்த்து மாணவர்கள் வடித்த கண்ணீர் நம் அனைவரின் உள்ளங்களையும் மெழுகு போல கரைய வைத்தது. தற்போது மேலும் ஒரு சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செய்து வரும் செயல், அவர்கள் மீது அதீத மரியாதையை வரவைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக இயங்கி வருகிறது அரசுப்பள்ளி ஒன்று. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், சுமார் 250 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 1962ம் ஆண்டு வெறும் ஆரம்ப பள்ளியாக உதித்த இந்த அரசுப் பள்ளி, தற்போது நடுநிலைப்பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது. இருப்பினும், இந்தப் பள்ளியில் வகுப்பறைகளோ, கழிவறை அல்லது குடிநீர் வசதிகளோ சீராக இல்லாத நிலை உள்ளது.

இந்த மாற்றங்கள் பொறுமையுடன் கையாண்டுள்ளார் அப்பள்ளி தலைமை ஆசிரியர் அகிலா. கடந்த 2010ம் ஆண்டு தனியார் அமைப்புகள் மற்றும் அரசிடமிருந்து பல உதவிகளைப்பெற்று பல்வேறு மாற்றங்களை மாணவர்கள் நலனுக்காக நடைமுறைப்படுத்தியுள்ளார். ஸ்மார்ட் கிளாஸ், கராத்தே, யோகா எனப் பல மாணவர்கள் நலன் மேம்பாட்டு வகுப்புகளையும் ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகு திருப்பூர் தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது நடுநிலைப்பள்ளி. மேலும், இந்த முன்னேற்றங்களால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இவ்வளவு மாற்றங்களும், மேம்பாடு வகுப்புகள் வந்த போதிலும், ஒரே ஒரு குறை மட்டும் தீர்க்கப்படாமல் இருந்தது. மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்த போதிய வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. ஆனால் அதற்கும் விரைவில் ஒரு தீர்வு கொண்டு வந்தனர் அங்குப் பணிபுரியும் ஆசிரியர்கள்.

மாணவர்களுக்குப் பாடம் எடுக்க வகுப்பறை பற்றாக்குறை இருந்து வந்த நிலையில், ஆசிரியர்களே தங்களது ஊதியத்தில் வாடகைக்குக் கட்டடம் எடுத்து பாடம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்களே தங்களது ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை செலவு செய்து, அருகே உள்ள கட்டடத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். எல்லா மாதமும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள கட்டடத்திற்கு பணம் செலுத்தி வருகின்றனர். தற்போது அந்தக் கட்டடத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர் ஆசிரியர்கள். எவ்வித சுயநலனும் இல்லாமல் மாணவர்களின் கனவுக் கோட்டைக்கு தூண்களாக இருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் உதவிச் செயல்கள், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திருப்பூர் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அகிலா, மாணவர்கள் படிக்க, அரசு விரைவாக வகுப்பறைகளைக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறார். அதோடு மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்படும் இந்த முயற்சிகள் அனைத்தும், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தலைமை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close