நீலகிரி மாவட்டத்தில் யானைகள் செல்லும் வழித்தடத்தில் அனுமதியின்றி இயங்கிவரும் 12 தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
மலைப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அந்த இடங்களை வலைத்துப்போட்டு, தனியார் நிறுவனங்கள் சில விடுதிகளை கட்டி பணம் பார்த்து வருகிறது. இதனால் யானைகள் ஊருக்குள் நுழையும் அபாயம் மற்றும் யானைகளின் வாழ்வியலில் பாதிப்புகள் ஏற்படும் அச்சம் இப்போது அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அனுமதியில்லாத விடுதிகள்
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 39 விடுதிகளில், 27 விடுதிகள் முறையான அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், அவை அத்தனைக்கும் உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்றும், எஞ்சியுள்ள 12 விடுதிகள் மேல்முறையீடு செய்துள்ளதால் அவற்றின் ஆவணங்களை சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து 27 விடுதிகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது. எஞ்சியிருந்த 12 விடுதிகளின் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் 12 விடுதிகளும் கட்டப்பட்டதில் முறைகேடு உள்ளதாக கண்டறியப்பட்டதையடுத்து, விடுதிகளை மூடுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
மசினகுடி, சிங்காரா, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 12 விடுதிகளும் 24 மணி நேரத்தில் சீல் வைக்கப்பட்டது.