தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கிய அதே நாளில், 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதன் பின்னணி என்ன என்று பார்ப்போம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா உள்பட பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வருகிறார் என்று தமிழக அரசு குற்றம் சாட்டிவருகிறது. மேலும், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட தேநீர் விருந்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன. மேலும், திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த சூழலில்தான், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது துணைவேந்தராக உள்ள சுதா சேஷய்யன் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, துணைவேந்தர் தேர்வுக்குழு தெரிவு செய்து அனுப்பிய பரிந்துரைகளைத் தவிர்த்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏற்கெனவே இருந்த துணை வேந்தராக இருந்த சுதா சேஷய்யனின் பதவிக்காலத்தை டிசம்பர் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். அப்போதே, துணை வேந்தர்கள் நியமனம் செய்வதில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கிய அதே நாளில், துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவராகவும் அரசு நிதித்துறை செயலாளரை உள்ளடக்கிய மசோதா, பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மாநில அரசின் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் ஆளுநரின் அதிகாரங்களை மாற்றி, சட்டங்களில் திருத்தம் செய்து மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் இரண்டு மசோதாக்களை தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநில அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில், இரண்டு மசோதாக்களும் குஜராத் பல்கலைக்கழக சட்டம் 1949 மற்றும் தெலங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டம் 1991 ஆகியவை மாநில அரசுகள் துணை வேந்தர்ர்களை நியமிக்க அனுமதிக்கும் சட்டங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் கர்நாடக மாநில பல்கலைக்கழகங்கள் சட்டம் 2000ஐயும் குறிப்பிடுகிறது. அம்மாநிலங்களில் துணை வேந்தர்கல் மாநில அரசாங்கத்தின் ஒப்புதலுடன் வேந்தரால் நியமிக்கப்படுகிறார்கள். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவராக அரசு நிதித்துறை செயலாளரை உள்ளடக்கிய மசோதாக்களின் நோக்கத்தை 'பொருள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை' பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் வெளிப்படுத்துகிறது.
இந்தத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்து 13 மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும். சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம் 1923, மதுரை காமராஜர் பல்கலைக்கழகச் சட்டம் 1978, அண்ணா பல்கலைக்கழகச் சட்டம் 1978, பாரதியார் பல்கலைக்கழகச் சட்டம் 1981, பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டம் 1981, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகச் சட்டம் 1984, அழகப்பா பல்கலைக்கழகச் சட்டம் 1985, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சட்டம் 1990, பெரியார் பல்கலைக்கழக சட்டம் 1997, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சட்டம் 2002, திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்டம் 2002, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக சட்டம் 2008 மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக சட்டம் 2013 ஆகியவை ஆகும். மாநில உயர்கல்வித் துறையால் நிர்வகிக்கப்படும் 13 பல்கலைக்கழகங்கள் இந்த மசோதாக்களின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய, தனியார் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டை, ஊட்டி ராஜ்பவனில் ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார். ராஜ் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆளுநர் தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் அதே நாளில், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு அளுக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றி இருப்பது தமிழக அரசு - ஆளுநர் மோதலின் அடுத்த உச்ச கட்டமாக பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.