ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, நிச்சயம் ஏழு பேருக்கும் விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும், ஏழு பேரின் விடுதலைக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இதுகுறித்து விடுமுறை நாளான கடந்த ஞாயிறன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அமைச்சரவையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம் அனுப்பியதாக செய்திகள் வெளியானது.
இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நேற்று தான் கவர்னர் மாளிகைக்கு வந்து சேர்ந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை கேட்டு மத்திய உள்துறைக்கு அறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும். இது குறித்து ஆலோசனைகள் நடத்த வேண்டி உள்ளது. தேவைப்படும்போது தேவையான ஆலோசனைகள் நடத்தப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.