துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு : துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர் நியமன முறைகேடு குறித்து ஆளுநர் பன்வாரிலால்
சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது. பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டது.
துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததைக் கண்டு நான் வருத்தமடைந்து, அதை மாற்ற நினைத்தேன். தகுதி அடிப்படையில்தான் துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே, துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளது என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தமிழக ஆளுநரே இவ்வாறு வெளிப்படையாக அதை ஒப்புக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆளுநரின் பேச்சு குறித்து பதில் அளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், "துணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை. துணைவேந்தரை நியமிப்பது ஆளுநரே. தேடுதல் குழு அமைப்பதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது" என்றார்.