நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் வியாழக்கிழமை அரசாணையை வெளியிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு அந்த எண்ணிக்கை 1 சதவீதத்துகும் கீழே குறைந்தது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வாய்ப்பு அளிக்கும் வகையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதா கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப் பேரவையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
இந்த 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆளுநர் காலதாமதம் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். முதல்வர் பழனிசாமியும் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதனிடையே, நீட் தேர்வு முடிவுகள் வெளியானதால், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்தவப் படிப்பு வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த மசோதாவுக்கு ஆளுநர் மனசாட்சிப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணையை வெளியிட்டது.
இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநா் தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளாா். இந்த மசோதா தொடா்பாக, மத்திய அரசின் சொலிசிடா் ஜெனரலிடம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தனது கருத்துகளைக் கடிதம் மூலமாகக் கோரினாா்.
இதற்காக சொலிசிடா் ஜெனரலுக்கு அக்டோபர் 26-ம் தேதி கடிதம் எழுதினாா். அதற்கு அக்டோபர் 29ம் தேதி சொலிசிடா் ஜெனரல் பதில் கடிதம் அனுப்பியுள்ளாா். அவரது கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, மசோதாவுக்கு ஆளுநா் தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா தொடா்பான கருத்துகளைக் கோர சொலிசிடா் ஜெனரலுக்கு தமிழக ஆள்நர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளா் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் கடிதம் எழுதினாா். இந்தக் கடிதத்துடன், தமிழக அரசின் 7.% உள் ஒதுக்கீடு மசோதாவும் இணைக்கப்பட்டிருந்தது. அது குறித்து மத்திய அரசின் சொலிசிடா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறியுள்ளதாவது, “தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்தும், உள்ஒதுக்கீடு அளிப்பது தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி கலையரசனின் பரிந்துரைகள் குறித்தும் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்டம் 15 (5)-ன்படி, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு சிறப்பு ஏற்பாட்டினை சட்டத்தின் மூலமாக வழங்கலாம். அந்த சிறப்பு ஏற்பாடு என்பது, தனியாா் கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் சோ்க்கைக்கான அம்சமாகவும் இருக்கலாம்.
உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினருக்கு ஆதரவாக நீதிபதி கலையரசனின் அறிக்கையில் புள்ளி விவரங்களுடன் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்மூலம், மற்றவா்களுக்கும் சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கும் இடையே இடைவெளி இருப்பது தெரிகிறது. இதனைப் போக்க மாநில அரசு சில சட்டப்பூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதன்படி, சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவானது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்றதாகவே இருக்கிறது” என்று துஷாா் மேத்தா தெரிவித்துள்ளாா்.
இதனைத்தொடர்ந்துதான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில், 7.5% உள் ஒதுக்கீடு மசோதா சட்டமாகியுள்ளது.
7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து நன்றி கூறினார். அப்போது, முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
முன்னதாக, 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு காலம் தாழ்த்தியபோது, விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இந்த சட்டத்தை அரசானையாக வெளியிட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யலாம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% #Reservation-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி!
திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம்.
இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்! pic.twitter.com/GTrRdAoGRz
— M.K.Stalin (@mkstalin) October 30, 2020
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% உள் இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்!” என்று ட்வீட் செய்துள்ளார்.