'பேராசிரியை நிர்மலாவின் முகத்தைக் கூட பார்த்ததில்லை'! ஆளுநர் பன்வாரிலால் - செய்தியாளர்கள் நேரடி சந்திப்பு!

சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “நான் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்று 6 மாதங்கள் முடிவடைந்துள்ளது. மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில், தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபடுவார்கள். இந்த சீரியஸான விவாகரத்தை விசாரிக்க, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்னைக் கேட்காமல், காமராஜர் பல்கலைக்கழகம் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் கமிட்டி நியமிக்கப்பட்டது. நான் பேராசிரியை நிர்மலா தேவியின் முகத்தை இதுநாள் வரை பார்த்ததில்லை” என்றார்.

மேலும், “என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. எனக்கு 78 வயதாகிறது. பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் எனக்கு உள்ளனர். என்னை இந்த சம்பவத்தில் தொடர்புப்படுத்தி பேசாதீர்கள். பேராசிரியை விவகாரத்தில் வெளிப்படையான விசராணை நடத்தப்படும். 15 நாளில் விசாரணை அறிக்கை சமர்பிக்கப்படும். சந்தானம் தலைமையிலான விசாரணை கமிட்டிக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது.

துணைவேந்தர்களை நியமிக்க, மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க தேவையில்லை. ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். பல்கலைக்கழக செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை மேற்கொண்டு வருகிறேன். பேராசிரியை விவகாரத்தில் காவல்துறை விசாரணையும் தொடரும். விசாரணை அறிக்கை வந்த பின், சிபிஐ விசாரணை குறித்து ஆலோசிக்கப்படும். சட்டவிதிகளின் படியே, சந்தானம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலை விதிகளின்படி, ஆளுநரே அதன் வேந்தர்.

காவிரி விவகாரம் குறித்து டெல்லி செல்லும் போதெல்லாம் நான் வலியுறுத்தினேன். கடந்த அக்டோபரில் நடந்த ஆளுநர் மாநாட்டின் போது கூட காவிரி குறித்து பேசினேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காவிரி பற்றி இன்று கூட மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பேசினேன். பிரதமரை சந்திக்க ஸ்டாலின் எழுதிய கடிதம், பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நல்ல முடிவு வரும்.

தகுதியின் அடிப்படையில் மட்டும் தான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தில் விதிகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளன. தேடல் குழு என்னிடம் மூன்று பேரை பரிந்துரைத்தது. மூவரில் பொறியியல் பின்னணி கொண்டவர் சூரப்பா மட்டுமே. அதனால் சூரப்பாவை நான் தேர்வு செய்தேன். மாநில அடிப்படையில் பாகுபாடு காட்டவில்லை.

என்னைப்பற்றி நீங்களும் விசாரிக்கலாம். என் வாழ்க்கை வெளிப்படையானது” என்றார்.

×Close
×Close