தமிழ்நாடு ஆளுனரின் மதுரை ஆய்வு, திமுக.வின் கருப்புக் கொடி போராட்டம் இல்லாமல் முடிந்தது. பஸ் மறியலில் கைது ஆனதால் கருப்புக் கொடியை அவர்கள் மறந்தனர்.
தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது என விமர்சனம் இருக்கிறது. எனவே வேலூர், திருநெல்வேலி என அவர் போகிற இடங்களில் எல்லாம் திமுக.வினரும் விடுதலை சிறுத்தைகளும் கருப்புக் கொடி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (ஜனவரி 29) மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அங்கு 306 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். பின்னர் அதே பகுதியில் உள்ள என்ஜிஓ காலனி அங்கன்வாடி மையத்திற்கு சென்றார். அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார். சுகாதார விழிப்புணர்வுக்கான தூய்மை ரதத்தை துவக்கி வைத்தார்.
ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தொடர்ந்து மதுரை காந்தி மியூசியத்திற்கு சென்று பார்வையிட்டார். மாலையில் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய, மாநில அரசுகளின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, மதுரை கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், எஸ்பி மணிவண்ணன், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது நிறைவேற்றப்பட்ட நலத்திட்ட பணிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகள் விளக்கி கூறினர். சுமார் 2 மணி நேரம் இக்கூட்டம் நடந்தது. பிறகு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மதுரை அருகே சக்கிமங்கலத்தில் கவர்னர் ஆய்வு பணி செய்வதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அந்த இடம் மாற்றப்பட்டது. திமுக.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்த வாய்ப்பு இருந்ததை கருதி இந்த மாற்றத்தை செய்ததாக தெரிகிறது.
விருந்தினர் மாளிகையிலிருந்து கிளம்பிய கவர்னர், மதுரை தெற்கு சித்திரை வீதியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தினார். பின்னர் மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறிய வீட்டிற்கு சென்று, நினைவகத்தில் இருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் சென்று, சென்னை திரும்பினார்.
பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று தமிழ்நாடு முழுவதும் மறியலில் ஈடுப்பட்டு கைதானார்கள். அதனால் கவர்னருக்கு எதிரான போராட்டத்தை அவர்களால் திட்டமிட முடியவில்லை. இதனால் கருப்புக்கொடி போராட்டம் இல்லாத பயணமாக, ஆளுனரின் மதுரை பயணம் அமைந்தது.