Advertisment

ஸ்டாலினுக்கு ஆலோசனை கூற ரகுராம் ராஜன் உள்ளிட்ட 5 பொருளாதார நிபுணர் குழு: ஆளுநர் உரை ஹைலைட்ஸ்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட 5 சிறந்த பொருளாதார நிபுணர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
governor speech, governor banwarilal purohit, banwarilal purohit, economist team to advise to cm mk stalin, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் உரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைக் குழு, நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், noble prize winner esther duflo, former rbi governor raguram rajan, tamil nadu assembly session start, tamil nadu assembly

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 16வது சட்டமன்றப் பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று (ஜூன் 21) தொடங்கியது.

Advertisment

16வது சட்டப் பேரவைக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயணன் ஆகிய உலகப் புகழ்பெற்ற 5 சிறந்த பொருளாதார நிபுணர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா, நோபல் பரிசு பெற்ற இந்தியாவைச் சேர்ந்த அபிஜீத் பானர்ஜியின் மனைவி ஆவார்.

ஆளுநர் உரையில் முக்கிய விஷயங்கள்: அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இறையாண்மையும், சமத்துவச் சமுதாயமும், மதச்சார்பின்மையும் கொண்ட மக்களாட்சியின் மாண்பு அமையப்பெற்ற குடியரசாக இந்தியா மலர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எடுத்த தீர்க்கமான முடிவால், இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்றுள்ள மகத்தான வெற்றி இந்த நோக்கத்திற்கு எடுத்துக்காட்டு என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சமூக நீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதி, இடஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் வாய்ப்பு, கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் முன்னேற்றம் ஆகிய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்த அரசு தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்த அரசின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சட்டமும், ஒவ்வொரு

திட்டமும், ஒவ்வொரு முயற்சியும் மேற்கூறிய கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று கூறினார்.

மேலும், தமக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்த பாரபட்சமும் இன்றி,

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு எப்போதும் செயல்படும். அனைவரையும்

ஒருங்கிணைத்துச் செல்லும் இந்த அரசின் நெறிமுறைக்கு ஏற்ப, தொடர்புடையோர் அனைவரையும், அனைத்துத் தரப்பு மக்களையும், சட்டமன்றப் பேரவையிலுள்ள அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து, கோவிட் பெருந்தொற்றினை எதிர்கொள்வது குறித்து இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் மகத்தான தலைவர், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி மறைந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசு பதவியேற்றுள்ளது. இந்த மாமன்றத்தில் அறுபதாண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்றத் தலைவராக அவர் திகழ்ந்தார். அவர் நம்முடன் இன்று இல்லை என்றாலும், அவருடைய கொள்கைகள் இந்த அரசை எப்போதும் வழிநடத்திச் செல்லும். மக்களாட்சியின் மாண்பின்மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையைத் தொடர்ந்து பின்பற்றும் வகையில், ஓர் உண்மையான குடியரசின் உயிர்நாடியாக

விளங்கும் நமது மக்களாட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தத் தேவையான அனைத்து

நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.

மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்டவும், அரசியலமைப்புச்

சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும், இந்த அரசு உறுதியாக உள்ளது. வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும். அதே நேரத்தில், ‘உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப, நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக, ஒன்றிய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும் என்று அளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

இந்த அரசு பதவியேற்றபின் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் புது டில்லி சென்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்குத் தேவைப்படும் உதவிகள், தமிழ்நாடு அரசின் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டிய பிரச்சினைகள், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் முக்கியத் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கி, ஒன்றிய அரசின் உதவியைக் கோரும் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரை நேரில் சந்தித்து அளித்தார்கள். இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆய்ந்து, தமிழ்நாடு அரசிற்குத் தேவைப்படும் உதவிகளை ஒன்றிய அரசு செய்யும் என நம்புகிறோம்.

இந்த அரசு பதவியேற்றபோது, தமிழ்நாட்டையும் நம் நாடு முழுவதையும் பெருமளவில் பாதித்திருந்த கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கோவிட் தடுப்புப் பணிகள் தொய்ந்திருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தபோதே, முதலமைச்சர் மற்ற எல்லாப் பணிகளையும் விட, கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரான பணிகளுக்கே முன்னுரிமை அளித்தார்கள்.

ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்பு வசதிகள் போர்க்கால

அடிப்படையில் கணிசமாக உயர்த்தப்பட்டன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்த

ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் தேவையையும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த அரசு நிறைவு செய்துள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு

பெறப்படும் மருத்துவ சிகிச்சைகளை விரிவுபடுத்தி, ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கருப்புப் பூஞ்சை தாக்கம் உள்ளிட்ட கோவிட் நோய்க்கான அனைத்து சிகிச்சைகளையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகள்

தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே தயக்கம் இருந்த சூழ்நிலை அறவே மாறி, தற்போது, தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு

போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கோவிட் பெருந்தொற்றிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள்

உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் பல்வேறு வகையிலும்

ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகமெங்கும் நடைபெறும் கொரோனா தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்துவரும் முதலமைச்சர் கோவை இ.எஸ்.ஐ.

மருத்துவமனையில் முழு உடல் கவசம் அணிந்து கொரோனா சிகிச்சைப் பிரிவிற்கே நேரில் சென்று,

அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்து, அங்கு பணிபுரியும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஊக்கப்படுத்தினார்கள். கூடுதல் மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொள்வதில் அயராமலும் தன்னலம் கருதாமலும் பணிபுரியும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சரின் சிறப்பான முயற்சிகளினால், கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்கெதிரான போரில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும், புலம்பெயர் தமிழர் சமுதாயத்தினரும் ஊக்கத்துடன் ஒன்று திரண்டுள்ளனர்.

பெருநிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள், அரசுசாரா தொண்டமைப்புகள், அரசியல் கட்சிகள், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் இந்த அரசுடன் தோளோடு தோள் நின்று செயல்படுகின்றனர். இதுவரை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதியுதவி பல்வேறு தரப்பிலிருந்து குவிந்துள்ளது.

இத்தொகையில், 141.10 கோடி ரூபாய் உடனடியாகவும், வெளிப்படையாகவும், உயிர்காக்கும் மருந்துகளையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு

மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக 50 கோடி ரூபாயும், கோவிட்

பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபாயும்

ஒதுக்கப்படும்.

பெருந்தொற்றுப் பரவல் சூழலில் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டியதன்

அவசியத்தையும், வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ள இந்த அரசு, மாநிலத்திலுள்ள 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு

4,000 ரூபாய் நிவாரணத் தொகையை இரண்டு தவணைகளாக மொத்தம் 8,393 கோடி ரூபாய்

நிதியுதவியை மே, ஜூன் மாதங்களில் வழங்கியுள்ளது.

உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் பலரும், பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இப்பேரிடர் காலத்தில் ஏழை எளியோருக்கு நேரடி நிவாரணத் தொகை வழங்குவதே சரியான நடவடிக்கை என வலியுறுத்திவரும் நிலையில், அதை ஒட்டியே தமிழக அரசும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளது.

நுகர்வோர் தேவையை ஊக்குவிக்கவும், பொருளாதார சுழற்சி இயல்பு நிலைக்குத் திரும்பிடவும் இது உதவும். இது தவிர, 466 ரூபாய் மதிப்பிலான 14 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும், 977.11 கோடி ரூபாய் செலவில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மே, ஜூன் மாதங்களுக்கு, மாநிலத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாநில அரசிற்கு கூடுதலாக 687.84 கோடி ரூபாய் செலவு ஏற்படும். ‚ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்‛ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை

மனதிற்கொண்டு செயல்படும் இந்த அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார

உதவியாக மொத்தம் 10,068 கோடி ரூபாயை இந்த அரசு பதவி ஏற்றது முதல் வழங்கி உள்ளது.

மேலும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், இதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். அதற்கேற்ப, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு

வருகின்றன. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது உள்ளிட்ட, மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிங் மருத்துவமனை வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

மாநிலத்திலுள்ள பல அரசு மருத்துவமனைகளில்,ஆக்சிஜன் சேமிப்பும் உற்பத்தித் திறனும் மேலும்

அதிகரிக்கப்பட்டு வருகின்றன. திரவ மருத்துவ ஆக்சிஜனையும், அது தொடர்புடைய கருவிகளையும் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு, தனியார் முதலீட்டாளர்களுக்கு சிறப்புத் தொகுப்புச் சலுகைகளை இந்த அரசு வழங்குகின்றது.

மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, தேசிய அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து,

அனைவருக்கும் இலவசமாக வழங்கும் கொள்கையை மீண்டும் ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசின் முடிவை இந்த அரசு வரவேற்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்காக போதிய அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுமாறு இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றது.

தமிழ் மொழியின் பெருமையைப் போற்றும் வகையில், தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில்

ஒன்றாக அறிவிக்க ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். தமிழ்நாட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழி

இணை-அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், இதற்காக அரசியலமைப்புச்

சட்டத்தின் பிரிவு 343 இல் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசை வலியுறுத்தும்.

சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்.

இந்த நிறுவனத்தை வேறு எந்தப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்காமல், அதன் தன்னாட்சி நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.

ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும் இந்த அரசு ஒன்றிய அரசை வற்புறுத்தும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளிக்கும். சாதிமதப் பிரச்சினைகள் இல்லாத அமைதியான, இணக்கமான சமூகச் சூழல் என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முற்றிலும் இன்றியமையாதது.

மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்புமக்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் இந்த அரசு

உறுதிப்படுத்தும் .

சட்டம், ஒழுங்கை திறம்பட பராமரிப்பதைஉறுதி செய்வதற்கும், குற்றங்களைத் தடுப்பதற்கும்

காவல்துறை பணியாளர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். இந்த வகையில், காவல்துறையினருக்கும், அவர்கள் பாதுகாத்து, சேவையாற்றும் மக்களுக்கும்

இடையிலான நல்லுறவே, காவல்பணியின் இன்றியமையாத குறிக்கோள் என்று இந்த அரசு

நம்புகிறது. இத்தகைய நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்காக, காவல் துறையினருக்குத்

தேவையான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவல்துறைப் பணியாளர்களின் குறைதீர்க்கும் செயல்முறைகள் வலுப்படுத்தப்படும்.

கருணை அடிப்படையிலான நியமனங்கள், குறிப்பாக, பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கான நியமனங்கள் விரைவுபடுத்தப்படும்.

அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை பெருமளவில் பாதிக்கக்கூடிய எண்ணற்ற அரசு வழக்குகள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. அனைத்து வழக்குகளுக்கும் விரைவாக தீர்வு காண்பதற்கும், உரிய காலகட்டத்தில் முடிவு எட்டப்படும் வரை, அரசு ஒரு தரப்பாக உள்ள வழக்குகளை முனைப்புடன் கண்காணிப்பதற்கும், புதிய மேலாண்மை அமைப்புகளையும் நடைமுறைகளையும்

இந்த அரசு உருவாக்கும்.

பரிவுள்ள ஆளுமை என்பது இந்த அரசின் முக்கியக் கோட்பாடாகும். ‘உங்கள் தொகுதியில்

முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் 100 நாட்களுக்குள் தீர்வு

காண்பதற்காக, முதலமைச்சர் ஏற்கெனவே சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில், பெருந்தொற்று பரவல் காலத்திலும், இதுவரை 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை இந்த அவைக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 • கோவிட் பெருந்தொற்று, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் பாதித்துள்ளதோடு,

  பொருளாதாரத்திலும் நிர்வாக அமைப்புகளிலும் உள்ள பலவீனங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

  அதே வேளையில், நீண்டகாலமாக நிலுவையிலுள்ள அமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஊக்கத்தையும், வாய்ப்பையும் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன. தற்போதுள்ள மனித வள மேலாண்மைக்கான அமைப்புமுறை, மிக முக்கியமான

  தரவு அமைப்புகள், தணிக்கை, கண்காணிப்பு செயற்பாடுகள் ஆகியவை முழுவதுமாக சீர்செய்யப்பட வேண்டுமென இந்த அரசு கருதுகிறது.

பொறுப்புடைமையைத் தக்கவைத்து, அதை மேம்படுத்துவதோடு, நடைமுறைகளையும்

செயற்பாடுகளையும் எளிமையாக்குவதன் மூலம் இந்த அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் குடிமக்களுக்கு முழுமையாகப் பலனளிப்பதை இந்த அரசு உறுதி செய்யும்.

மின் ஆளுகையை ஊக்குவித்து, இணையவழி மூலம் அரசு சேவைகளைப் பெறுவதற்கான

வழிகளை உயர்த்தி, வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.

‘எங்கும் எப்போதும் அரசு சேவைகளை’ பொதுமக்கள் இணையவழி வாயிலாக உடனுக்குடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

பொதுமக்களுக்கு இயற்கைப் பேரிடர் தொடர்பான செய்திகளையும் எச்சரிக்கைத்

தகவல்களையும் சரியான நேரத்தில் தெரிவிப்பதற்காக, புதிய தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்படும். அரசுசாரா அமைப்புகள் உட்பட, சுற்றுப்புறத்தில் உள்ள முதலில் உதவக்கூடியவர்களுக்கு, பேரிடர் காலத்தில் ஆரம்பக்கட்ட மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும். மேலும், பேரிடர் மீட்புப் பணிகளுடனும் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளுடன் அவர்களின் செயல்பாடு ஒருங்கிணைக்கப்படும்.

தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதே இந்த அரசின் முன்னுரிமை ஆகும்.

மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதான புகார்களையும் விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு புத்துயிரும் உரிய அதிகாரமும் அளிக்கப்படும். ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புப்பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு, நிலுவையிலுள்ள புகார்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும். பல்வேறு அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொதுச்சேவைகளை முறைப்படுத்திட ‘சேவைகள் உரிமைச் சட்டம்’ அறிமுகப்படுத்தப்படும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இடைவெளிகளும் அதிக அளவில் இருக்கும்போது,

சமூக நீதி சாத்தியமல்ல. எனவே, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே இந்த அரசின் முழு

நோக்கமாகும். வளர்ச்சியும், முன்னேற்றமும் பொருளாதார அமைப்பின் உச்சியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது சமுதாயத்திலுள்ள அனைவருக்கும் பலனளிக்க வேண்டும் என்பதே இந்த அரசின் குறிக்கோள்.

 • கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதைக்

  காண்கிறோம். இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். வரும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மனிதவளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி, விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கானப் பாதையை வகுத்து தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.
 • அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் ஒன்றிய

  நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை இந்த அரசு

  உறுதி செய்யும்.
 • தமிழ்நாட்டின் நிதிநிலை கவலைக்குரியதாக இருக்கும் இச்சூழ்நிலையில், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவது இந்த அரசின் தலையாய கடமையாகும். இந்த வகையில், மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன்சுமையை குறைக்கவும், நிதிநிலையை மேம்படுத்தவும் இந்த அரசு முழுக்கவனம் செலுத்தும். இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இதன்மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதிநிலையின் விவரங்கள் முழுமையாகத்

  தெரிவிக்கப்படும்.

துல்லியமான புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட

வேண்டுமென்று இந்த அரசு நம்புகிறது. குறிப்பாக, துறைகளுக்கிடையே போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் இம்முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவ்வாறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது பொதுமக்களின் பார்வையில் அரசு செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மையையும் உயர்த்தும். பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.

நம் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில்,

இந்த அரசு, வேளாண்மைத் துறையை, ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றம்

செய்துள்ளது. விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் நலச் சங்கங்கள், வல்லுநர்களின் முனைப்பான பங்களிப்புடன் கூடிய புதிய தொழில்நுட்பங்கள், பயிரிடுவதற்கான புதிய முறைகள், வேளாண்மை நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்காக, கால்நடைப் பராமரிப்பு, இயற்கை வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடுதல் போன்ற வேளாண் தொடர்புடைய

செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும். வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும்.

கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், வாகனங்கள் மூலம் மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே காய்கறிகளும் பழங்களும் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்களிடையே பெருமளவில் வரவேற்பு பெற்ற இத்திட்டத்தை விரிவுபடுத்தி, தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

2021-22 ஆம் ஆண்டில், 125 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கினை அடைய இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக, திட்டமிட்டபடி, இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

கடைமடைப் பகுதிகள் வரை நீர் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, 4,061 கிலோமீட்டர் நீளமுள்ள

கால்வாய்களை தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

 • தமிழ்நாடு போன்ற நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலத்திற்கு நீர்வள மேலாண்மை மிகவும்

  முக்கியமானதாகும். எனவேதான், நீர்வளங்களுக்கென ஒரு தனி அமைச்சகம் இந்த அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும். இளைஞர்களின் ஆர்வத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டிலுள்ள நீர்வளங்கள் மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

 • மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க, இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு கேரள அரசையும், ஒன்றிய அரசையும் இந்த அரசு கேட்டுக்கொள்ளும்.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 9ஆம் தேதி அன்று, திருச்சி-கரூர் இடையே மாயனூரில் காவிரி நதியின் குறுக்கே கட்டளை கதவணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். அத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடித்திட இந்த அரசு உறுதியாக உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ், இடைமலையாறு அணை கட்டுமானத்தை கேரள அரசு நிறைவு செய்துள்ளதையடுத்து, அதன் தொடர்ச்சியாக,

ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடன் இந்த அரசு பேச்சுவார்த்தையை தொடங்கும்.

 • கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட, நமது மீனவர்

  சமூகத்தின் நலன்களை இந்த அரசு பாதுகாக்கும். இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும். கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக, மீனவர்கள்

  நலனிற்கான தேசிய ஆணையத்தை அமைக்குமாறு ஒன்றிய அரசிடம் இந்த அரசு கோரும்.

இந்த அரசு பிறப்பித்த முதல் ஐந்து ஆணைகளில் ஒன்றாக, நடுத்தர வகுப்பினருக்குப் பெரும் பயனளிக்கும் வகையில், ஆவின் பாலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விற்பனையும் ஏறத்தாழ 1.5 இலட்சம் லிட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

 • ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும். குடும்ப

  அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள்

  ‘ஸ்மார்ட் கார்ட்’ வழங்கப்படும். கடந்த 2007 ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர்

  கலைஞரால் தொடங்கப்பட்ட சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பருப்பு, பாமாயில்

  மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களின் கொள்முதல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு கணிசமான அளவில் நிதி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.
 • சமூகநிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் (NEET) தேர்வு

  ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய, நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களது தலைமையில் ஒரு

  குழுவை இந்த அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைப் பெற்று, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, அத்தகைய சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற, உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.  அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும். முன்னாள்

  முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரில், 70 கோடி ரூபாய் செலவில் மதுரையில் சர்வதேசத் தரத்திலான நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
 • அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைத்திட, இந்த அரசு இடையறாத முயற்சிகளை மேற்கொள்ளும். அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும். 2019-20 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்ட செயல்திறன் தரக் குறியீட்டின் (PGI) தரவரிசைப் பட்டியலில், கற்றல் வெளிப்பாடு மற்றும் தரத்தில் தமிழ்நாடு பின்தங்கி விட்டது. எனவே, இதில் அதிக கவனம் செலுத்தி, முதலிடத்தைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு

  மேற்கொள்ளும். குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதற்காக, ஓர் இலக்குசார் திட்டம் செயல்படுத்தப்படும். பெருந்தொற்று காலத்தின்போது ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்படும்.
 • கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது,மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது இந்த அரசின் முதன்மைப் பணியாகும். அதன்படி, இயன்றவரையில், நிலையான இயக்க நடைமுறைகளுக்கு இணங்க, தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியங்களின் செயல்பாடு வலுப்படுத்தப்பட்டு, வாரிய உறுப்பினர்களுக்கு, தேவைப்படும் காலத்தில் உதவி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்யும். திறன் மேம்பாட்டுப் பயிற்சி வாயிலாக, வேலைவாய்ப்புகளையும், சுய வேலைவாய்ப்புகளையும் உயர்த்தும் நோக்கத்துடன் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பல்வேறு அரசுத் துறைகளின் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக சிறப்பாக ஒருங்கிணைக்கப்படும்.
 • கோவிட் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை விரைவாக மீட்டெடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. சிறுகடன் பெற்றுள்ளவர்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து, ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு முதலமைச்சர் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளார்கள்.
 • இந்தப் பெருந்தொற்றுக் காலத்தின்போது, குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு

  நிவாரணங்களை மிக விரைவாக அரசு வழங்கியுள்ளது. மேலும், மாநில அரசிடமிருந்து பெறப்படும் மூலதனம் மற்றும் வட்டி மானியங்களை விடுவிக்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தியதன் மூலம் கூடுதல் நிதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு நிலுவைத்தொகை

  செலுத்துவதற்கான காலஅளவும், 15 சட்டரீதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான காலஅளவும்

  நீட்டிக்கப்பட்டுள்ளன. நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறும்போது, சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவின் மீதான முத்திரைத் தீர்வையை செலுத்துவதிலிருந்து அளிக்கப்படும் விலக்கை, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அரசு நீட்டித்துள்ளது.

தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்பட வேண்டிய தொழில் வரியை செலுத்துவதற்கான கால அளவும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டினை உறுதிப்படுத்துவதும், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து துறைகளிலும், பன்முகத் தொழில் வளர்ச்சியை உறுதி செய்வதுமே

தமிழ்நாட்டின் தொழில் கொள்கையின் நோக்கங்கள் ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்

நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக, தொழிலதிபர்கள், வங்கியாளர்கள்,

நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும்.

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் இரத்னவேல்

பாண்டியன் அவர்களது தலைமையில் குழு அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்த நடவடிக்கைகள் போன்றே, சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும் (Corridor), சென்னைபெங்களூரு தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.

மாநிலத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளிலிருந்த தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இவ்விரு கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதன் மூலமும், பழைய, செயல்திறன் குறைந்த காற்றாலைகளை புனரமைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், மின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும். நவீன தொழில்நுட்பங்களையும், நுண் மின்கட்டமைப்புகளையும் பயன்படுத்தி, மின் சேமிப்பை உயர்த்துதல் மற்றும் விநியோகத்தில் மின் இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 • உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சிக் கொள்கை மீது இந்த அரசு உறுதியான நம்பிக்கை

  கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், மாநிலத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த அரசு புத்துயிர் அளிக்கும். 2016 ஆம் ஆண்டில்

  நடைபெறவிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக

  உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை.

  முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு, அனைத்துவகையிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்னர், கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 • ஊரக வீட்டுவசதி, குடிநீர் வழங்கல், தெருவிளக்கு, சாலை வசதி, நீர்நிலைகளை மறுசெறிவூட்டல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நகர்ப்புர மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்குவது இந்த அரசின் தலையாய முன்னுரிமையாக இருக்கும்.  கிராமப்புற, நகர்ப்புரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏழை எளியோருக்கான வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பதில் இந்த அரசு கவனம் செலுத்தும். வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்காகக் கண்டறியப்பட்டுள்ள அனைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கும் வீடுகள் வழங்கப்படும்.
 • மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்காக புறநகர்ப் பகுதிகளில்

  நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். மாநிலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் மண்டலம் வாரியான திட்டங்கள் வகுக்கப்படும். அனைத்துத்

  தரப்பினருடனும் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு, சென்னைக்கான மூன்றாவது பெருந்திட்டத்தை தயாரிக்கும் உரிய காலமான 2026 ஆம் ஆண்டிற்கு

  முன்னரே அப்பணி முடிக்கப்படும்.

 • சென்னைக்கு அருகில் இருந்த 42 உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சியுடன்

  இணைத்து, மாநகர எல்லைகள் விரிவாக்கப்பட்டன. இணைக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படைக்

  கட்டமைப்புகளில் இன்னும் உரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, இணைக்கப்பட்ட பகுதிகளில்

  இந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

  சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னை மாநகரத்தை ‘சிங்காரச் சென்னையாக’ மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த வகையில், சென்னையில் மாநகரக் கட்டமைப்பைநவீன சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திடும் வகையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ எனும் புதிய திட்டம்

செயல்படுத்தப்படும்.

 • நகர்ப்புர நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காகவும், போக்குவரத்து மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் குடிமக்களுக்கு சேவைகளை சிறப்பாக வழங்கவும், ஒரு புதிய மாதிரித் திட்டம் உருவாக்கப்படும். வெள்ளக் கட்டுப்பாட்டு முறைகளை வகுக்கவும், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ளநீர் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல், நகரத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்களை

  உள்ளடக்கிய ‘சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும்.

 • நெடுஞ்சாலைக் கட்டமைப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  முக்கியமான நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும், அகலப்படுத்தவும், வலுப்படுத்தவும் தேவையான திட்டம் வகுக்கப்படும். அனைத்து முக்கிய நகரங்களுக்கும் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். கடந்த ஆண்டுகளில், காரணமின்றி நிறுத்திவைக்கப்பட்ட மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்தத்

  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 • 2009 ஆம் ஆண்டில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங்கியது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தைப் போலவே, 50:50 என்ற செலவுப் பகிர்வு அடிப்படையில்,

  ஒன்றிய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை விரைவாக வழங்க வேண்டும் என்று

  இந்த அரசு வலியுறுத்தும். மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருந்திரள் விரைவு போக்குவரத்து அமைப்புகளுக்கான

  சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

 • மாநிலத்தின் பேருந்துப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்குவதற்கும் திறம்பட

  செயல்படுத்துவதற்கும் இந்த அரசு உறுதியாக உள்ளது. பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் அனைத்து சாதாரண நகரப் பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணத்திற்கான திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

  தொடங்கி வைத்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் மூலம் பொருளாதாரச் செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பும், பொதுப் போக்குவரத்தை

  பயன்படுத்துவோரின் பங்கும் அதிகரிக்கும்.

 • தமிழ்நாட்டின் சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், ஒரு பெருந்திட்டம் நடப்பாண்டில் வெளியிடப்படும். பழங்காலக் கோட்டைகளும் அரண்மனைகளும் பழமை

  மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரியச் சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.

 • தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் அறக்கட்டளைச் சட்டம் நம் நாட்டிற்கே ஒரு முன்மாதிரி சட்டமாக விளங்குகிறது. கோயில்களின் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புடைமையையும் முன்னிறுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும். அனைத்து முக்கிய இந்துக்

  கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோயில்களின் பராமரிப்பை

  செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாநில அளவிலான ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படும்.

 • பெண்களின் நல்வாழ்வு, மேம்பாடு மற்றும் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு சிறப்புத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தும். மகப்பேறு உடல் நலன் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக, பெண்களின் உடல்நலனை மேம்படுத்துவதில்

  தனிக்கவனம் செலுத்தப்படும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு, இணையவழிக் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உயர் முக்கியத்துவம் வழங்கப்படும். வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகளவில் ஊக்குவிக்கும்பொருட்டு, பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டந்தோறும்

  நிறுவப்படும்.

 • தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயன் தரக்கூடிய நிதிச்சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். சுய உதவிக்குழுக்களின் பொருளாதாரச் செயல்பாடுகளை உயர்த்துவதற்காக, அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் வழிவகைகள் வலுப்படுத்தப்படும். இணையவழி வணிகம் உட்பட, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிகளையும் இந்த அரசு செம்மைப்படுத்தும்.

 • ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப,

  உயிர்ப்புள்ள தமிழ்ச் சமூகத்தில் இணைந்திட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்களை இவ்வரசு வரவேற்கும். அதே நேரத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.

  இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும், ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும்,

  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று

  ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்.

 • சமூக நீதியின் இலட்சியங்களைப் பாதுகாத்திடவும், சமூக மற்றும் கல்விரீதியாகப்

  பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்தைப் பாதுகாத்திடவும் இந்த அரசு எப்போதும் பாடுபடும். 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, காலத்தை வென்று,

  சமூகநீதியை உறுதி செய்துள்ளது. இந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத

  இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களை நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை நீக்கவும், அவை நீக்கப்படும் வரையில், தற்போதைய வருமான வரம்பினை 8 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம்

  ரூபாயாக உயர்த்தவும், இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும். வெவ்வேறு சமூகங்களின் பின்தங்கிய நிலையை நிர்ணயிப்பதில், மாநில அரசின் அதிகாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் இந்த அரசு உறுதி செய்யும்.

 • அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள்

  சிறப்பு நியமனங்களின் மூலம் நிரப்பப்படும். பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்படும். திட

  மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் நவீன தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி, தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான,

  சுகாதாரமான பணிச்சூழல் உருவாக்கித் தரப்படும்.

 • கல்வி முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு மற்றும் வீட்டுவசதிகளை சிறுபான்மையினர்

  எளிதில் பெறுவதற்கான திட்டங்களை, சச்சார் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு திறம்பட செயல்படுத்தும். உரிய நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமாக வக்ஃபு வாரியத்தின் நிலங்கள் பாதுகாக்கப்படும்.

 • மாற்றுத் திறனாளிகளின் நலனை உறுதி செய்வதற்கு இந்த அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைக்

  குறிக்கும் வகையில், மாற்றுத் திறனாளர் நலன் தொடர்பான துறையை முதலமைச்சர்

  தன் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டுள்ளார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 இன் விதிகள் திறம்பட நடைமுறைப்படுத்தப்படும். இவர்களுக்கான பராமரிப்பு,

  மறுவாழ்வு மற்றும் ஆதரவளிக்கும் திட்டங்களின் பயன்கள் சரியாகச் சென்றடைவதை உறுதி

  செய்வதற்காக, அதிக இடங்களில் களப்பணியாற்றிடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

  வலுப்படுத்தப்படும்.

 • 2008 ஆம் ஆண்டில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மூன்றாம் பாலினத்தினருக்கு

  ‘திருநங்கைகள்’ என முதன்முதலில் பெயரிட்டார்கள். திருநங்கைகளுக்கு நலவாரியத்தை அமைத்து,

  அதன் மூலம் நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார்கள். திருநங்கைகளின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த, வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

 • விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது தனிநபர் மற்றும் சமூகத்தின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்துகிறது. ஒலிம்பிக் போட்டிகள் போன்ற சர்வதேசப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை

  வெல்வதற்குத் தேவையான, உயர்மட்ட செயல்திறன் பயிற்சி, ஊக்கத்தொகை, போட்டிகளில் பங்கேற்பதற்கான பயணச் செலவுகள் ஆகியவை நமது மாநிலத்தைச்

  சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும். அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான

  ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களின் பணி நியமனம் திறம்பட செயல்படுத்தப்படும்.

 • அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், அரசு அலுவலர்களின் பங்கினை

  இந்த அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாக்கும். அரசு அலுவலர்கள்

  மற்றும் ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்பட்டு,

  செயல்படுத்தப்படும்.

 • எதிர்நோக்கியுள்ள அனைத்து சவால்களையும் வென்று, திறம்பட்ட நிர்வாகத்தை வழங்குவதற்கும், மாநிலத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் ஊக்குவிப்பதற்கும் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவதை

  மக்களுக்கான இந்த அரசு உறுதி செய்யும்.

மாநிலத்தின் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இந்த அரசு செயல்படுத்த விரும்பும் பல்வேறு கொள்கைத் திட்டங்களை இந்த உரையில் நான்

எடுத்துரைத்துள்ளேன். இதுபோன்ற பல நல்ல திட்டங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் இடம்பெறும்.

 • நமது மாநிலத்தின் மக்கள், மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்து, இந்த மாமன்றத்திற்கு

  உங்கள் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்துள்ளனர். நீங்கள் அனைவரும் இந்த எதிர்பார்ப்புகளை

  நிறைவுசெய்யும் வகையில் கடினமாக உழைப்பீர்கள் என நம்புகிறேன். மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மகத்தான மரபுகளுக்கு ஏற்ப, விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும் ஆக்கபூர்வமாக பங்களிப்பீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

 • ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற மாபெரும் சமூகநீதித் தத்துவத்தின் அடிப்படையில்

  அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும். ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும். அனைத்து மக்களும் சேர்ந்து ‘எமது அரசு’ என்று பெருமையோடு நெஞ்சு நிறைந்து சொல்லும் வகையில் இந்த அரசு தனது பயணத்தைத் தொடரும்.

 • தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாகவும், உரிமை பெற்ற

  மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு

  உறுதியேற்றுள்ளது.

 • திராவிட சித்தாந்தத்தின் ஒப்பற்ற தலைவர், நவீன தமிழ்ச் சமுதாயத்தைச் செதுக்கிய சிற்பி,

  முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி வகுத்தளித்த பாதையில் தொடர்ந்து பீடு நடை போட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தலைநிமிர்ந்து நோக்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம். இந்தியாவின் ஈடு இணையற்ற மாநிலம் இன்பத் தமிழ்நாடுதான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு, இந்த உரையை நிறைவு செய்கிறேன்.” இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Tamilnadu Assembly Governor Banwarilal Purohit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment