கஜ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை மற்றும் நாளை மறுநாள் நேரில் சென்று பார்வையிடுகிறார்.
ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு:
நெற்காடாக இருந்த டெல்டா மாவட்டங்களை கஜ புயல் வெள்ளக்காடாக மாற்றிச் சென்றது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கடும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றன.
இந்நிலையில், கஜ புயல் பாதித்த 3 மாவட்டங்களில் வரும் 21, 22-ஆகிய தேதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "கஜா புயல் பாதித்த மாவட்டங்களை ஆய்வு செய்வதற்காக வரும் 20-ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு, 21ஆம் தேதி முழுவதும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
21-ஆம் தேதி இரவு ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் சென்று தங்கிவிட்டு, 22ஆம் தேதி திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் ஆளுநர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்லும் நேரத்தில், அவருக்கு மாவட்ட ஆட்சியர்கள் மலர்கொத்து, புத்தகங்கள் மற்றும் பொன்னாடை வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆளுநர் தனிப்பட்ட முறையில் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.