தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் கோப்பை, 3 முறை திருப்பி அனுப்பினோம்: ஆளுனர் விளக்கம்

தமிழக அரசு பரிந்துரைத்ததன் பேரிலேயே அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவின் கீழ் 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 3 முறை சம்பந்தப்பட்ட கோப்பை திருப்பி அனுப்பியதாக ஆளுனர் மாளிகை தெரிவித்தது.

கடந்த 2000-ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை இலக்கியம் பட்டியைச் சேர்ந்த விவசாயக் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்துக்கு, தருமபுரி அருகே அதிமுகவினர் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் தீயில் கருகி பலியாயினர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுகவினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், மூவரும் கருணை மனு தாக்கல் செய்ய, அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தற்போது எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நன்னடத்தை விதியின் படி, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கலாம் என்ற அடிப்படையிலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், வேலூர் சிறையில் உள்ள ரவீந்திரன், நெடுஞ்செழியன் மற்றும் முனியப்பன் ஆளுநரின் ஒப்புதலோடு நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது.

அதில், 3 பேரும் சட்டப்படியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு பரிந்துரைத்ததன் பேரிலேயே அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவின் கீழ் 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறையிலுள்ள ஆயுள் தண்டனக் குற்றவாளிகள், கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என கடந்த பிப்.1-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

இது தொடர்பான கோப்பு ஆளுநரின் பார்வைக்கு வந்தது. அதில் 1858 ஆயுள் தண்டனை குற்றவாளிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 161 வது பிரிவின்படி விடுதலை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. விடுதலை செய்யப்படும் குற்றவாளிகள் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருக்க வேண்டும். ஆனால், 5 ஆண்டுகள் என அரசு நிர்ணயம் செய்திருந்ததை ஆளுநர் பன்வாரிலால் சுட்டிக்காட்டியதோடு, திருத்தத்திற்கு திருப்பி அனுப்பினார்.

இதனடிப்படையில், மே 3-ம் தேதி புதிய அரசாணை வெளியிடப்பட்டது. ஆயுள் தண்டனை குற்றவாளிகள் 1627 பேரை விடுதலை செய்யும் திருத்தப்பட்ட கோப்பு ஆளுநரின் பார்வைக்கு வந்தது. ஒவ்வொரு குற்றவாளியின் பின்னணியையும் ஆராய்ந்து ஒப்புதலளித்த ஆளுநர், தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகிய மூவரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை மட்டும் அரசின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பினர்.

இந்த தீர்மானம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் மீண்டும் அக்டோபர் 25-ம் தேதி ஆளுநரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் அக்டோபர் 31-ம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

“யாரையும் கொலை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் இவர்கள் செயல்படவில்லை. கலவத்தின் நடுவே உணர்ச்சிவயப்பட்டுவிட்டனர்” என்று விளக்கம் அளித்தனர்.

இதன் அடிப்படையில் தலைமை வழக்கறிஞர் ஆலோசனை பெற்று, மூவரையும் விடுதலை செய்யும் கோப்பை அரசின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பிவைத்தார். உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் ஒப்புதல் மீண்டும் பெறப்பட்டது.

நவம்பர் 12ஆம் தேதி ஆளுநரின் பார்வைக்கு மூன்றாவது முறையாக, மூவரின் விடுதலை தொடர்பான கோப்பு கொண்டு வரப்பட்ட போது அப்பொழுதும் ஆளுநர் முழு திருப்தி அடையவில்லை.

இறுதியாக, குற்றவாளிகள் 3 பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்று திருப்தி அடைந்தார். இவ்வழக்கில் குற்றவாளிகள் கொலை செய்யும் நோக்கோடு செயல்படவில்லை. பொதுச் சொத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தவே கலவரத்தில் ஈடுபட்டனர் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.

குற்றவாளிகள் 13 வருட காலம் சிறை வாசத்தை அனுபவித்ததையும் கணக்கில் கொண்டு, இந்திய அரசிலமைப்புச் சட்டம் 161 ஆவது பிரிவின்படி மூவரையும் விடுதலை செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார்” என ராஜ்பவன் விளக்கமளித்துள்ளது.

அதிமுக.வினர் மூவரையும் விடுதலை செய்துவிட்டு, ராஜீவ் கொலைக் கைதிகள் 7 பேரை ஆளுனர் விடுவிக்க ஒப்புதல் அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக ஆளுனரை தாக்கி இது தொடர்பாக அறிக்கை விட்டார். இந்தச் சூழலில் ஆளுனர் மாளிகை இந்த விரிவான விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close