ஆளுநர் ஆர்.என். ரவி நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதால், சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தேநீர் விருந்தை ரத்து செய்வதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் தோல்வியடைந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஷ் தற்கொலை செய்துகொண்டார். இதனால், மனம் உடைந்து விரகிதியில் இருந்த அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இருவரின் மரணங்கள் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி உறுதியாகக் கூறியுள்ள நிலையில், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் நிகழும் மாணவர்களின் தற்கொலைகளைக் கண்டும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதைக் குறிப்பிட்டு, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் வழங்கப்படும் தேநீர் விருந்தை புறக்கணிபதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்தார். அதே போல, தி.மு.க கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.
இதைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேநீர் விருந்து நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”