டெல்லித் தமிழ்க் கல்விக்கழக மேனிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்துப் பேசிய, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடி உயரமும், ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையை, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார்.
திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: திருவள்ளுவர் பழங்கால இந்திய துறவிகளின் விண்மீன் மண்டலத்தில் ஒரு பிரகாசமான சூரியன் என்று ஆளுநர் ரவி பாராட்டினார்.
‘திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. திருக்குறள் பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது.
தமிழக ஆளுநராக நான் பதவியேற்ற பிறகு, எனக்கு திருக்குறள் புத்தகமே அதிக அளவில் பரிசாக கிடைத்தது. திருவள்ளுவரை பொறுத்தவரை உள் ஒளி மிக்க ஆன்மிகவாதி.
திருக்குறளின் முதல் குறளில் ஆதிபகவன் என்று திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். ஆதி பகவன் தான் இந்த உலகத்தை படைத்தார். அதைத்தான் திருவள்ளுவர் கூறுகின்றார்.
ஆனால் திருக்குறளை மொழி பெயர்த்த ஜி.யூ.போப் திருக்குறளில் உள்ள ஆன்மிக சிந்தனைகளை நீக்கிவிட்டார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யூ.போப் தந்திருக்கும் திருக்குறளின் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறத” என்று பேசியுள்ளார்.
மேலும், “திருக்குறளில் பக்தி ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டது. ஆதி பகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர். பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பைவிடுத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை கலாசார இல்லாத நாடாக, ஒரு பொருளாக, சந்தையாக காட்ட முயன்றனர். இந்தியா, கலாசாரம் நிறைந்த பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்தது.” என்று ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
கனடாவில் பிறந்து கிறிஸ்தவ மிஷனரியாக இந்தியா வந்து 40 ஆண்டுகாலம் தமிழுக்கு சேவை செய்த பெருமைக்கு உரிய ஜி.யு.போப். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழ் இலக்கியத்தின் மேன்மையை உலக அரங்குக்கு கொண்டு சென்றவர்.
தமிழுக்கு தொண்டு செய்த ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பில், பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது என்று ஆர்.என். ரவி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லி தமிழ் கல்விக் கழக மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தில்லித் தமிழ்க் கல்விக்கழக மேனிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்து திருவள்ளுவர் பழங்கால இந்திய துறவிகளின் விண்மீன் மண்டலத்தில் ஒரு பிரகாசமான சூரியன் என்று ஆளுநர் ரவி பாராட்டினார்.
திருக்குறளை ஒரு விலைமதிப்பற்ற இந்திய வேதநூலாக மாற்ற காலனித்துவ ஆட்சியின் மோசமான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
தமிழ்ச் சங்க இலக்கியம் பாரதத்தின் ஆன்மிகத்தையும், அழகையும் எப்படிக் கொண்டாடுகிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, விளக்கினார்.” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஆளுநர் ஆர்.என். ரவி, “மாணவர்கள் பெரிய கனவுகளை காணவும், அவர்களின் கனவுகளை அடைய கடினமாக உழைக்கவும், பின்னடைவுகளால் தன்னம்பிக்கையை இழக்கவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
மகிழ்ச்சியான, வலிமையான மற்றும் வளமான பாரதத்தை உருவாக்குவதில் #அமிர்தகாலத்தில் மாணவர்களின் பங்கை ஆளுநர் எடுத்துரைத்தார்.” என்று கூறினார் என ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.